அத்துமீறிய கடலட்டை பிடித்தல் தொழிலை நிறுத்த வலியுறுத்தி வெடித்தது போராட்டம்

0
557
Vadamarachchi East fishermen forced stop fishing activities

(Vadamarachchi East fishermen forced stop fishing activities)

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய கடலட்டை மீன்பிடித் தொழிலை நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை இன்று நடத்தியிருந்தனர்.

கடற்படையின் உதவியுடன் கடலட்டை தொழிலில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்வோம் என்ற உதவிப் பணிப்பாளரின் வாக்குறுதியின் அடிப்படையில் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

எதிர்வரும் 3 தினங்களில் வெளிமாவட்ட மீனவர்களை கட்டுப்படுத்தாவிடின், மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தினை முற்றுகையிடவுள்ளதாக போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை தொழில் செய்வதை கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (08) போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

யாழ். பண்ணையில் அமைந்துள்ள அலுவலகத்தை இன்று காலை 7.30 மணியளவில் முற்றுகையிட்டு அலுவலகர்கள் உள்ளே செல்லாதவாறு முடக்கப்பட்டிருந்தது.

சுமார் 4 மணித்தியாலயத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட இந்த முற்றுகைப் போராட்டத்தின் பின்னர், சுமார் 11.30 மணியளவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார்.

அந்த பேச்சுக்களின் போது, இணக்கம் காணப்பட்டு, போராட்டம் கைவிடப்பட்டது. அந்த போராட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
“இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

நிபந்தனைகளை மீறி கடலட்டை தொழில் செய்பவர்களை இயன்றளவு கைதுசெய்துள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.

ஒரு நாளைக்கு ஒரு படகு வீதம் கைதுசெய்வதனால், எந்தவித பிரியோசனமும் இல்லை.

ஆகையால் இன்றிலிருந்து அந்த நிபந்தனையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை கடற்படையின் உதவியுடன் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

அதனடிப்படையில் வடமராட்சி கிழக்கு மக்களும், கடற்படை மற்றும் நீரியல்வளத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தெரிவிக்கப்பட்ட நிபந்தனையை மீறும் செயற்பாடு வெளிப்படும் போது, உடனடியாக கடற்படையினருக்கு தெரிவித்து வெளிமாவட்ட மீனவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 3 தினங்களுக்குள் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையினரின் உத்தரவாதத்திற்கு அடிப்படையில் மக்களுக்கு திருப்தியான முறையில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா? எனப் பார்ப்போம்.

அவ்வாறு நடக்காவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் நிர்வாக முடக்கப் போராட்டத்தை தொடருவோம்.

கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் தமது கடமையைச் செய்வதற்கும், வெளிமாவட்ட மீனவர்கள் மற்றும் கடலட்டை தொழில் செய்யும் மீனவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை திறம்பட செய்வதற்கும் அனுசரணையாக கதவை திறந்து, அவர்களது கடமையை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், கே.சயந்தன், சுகிர்தன் மற்றும் பரம்சோதி, யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், மாநகர உறுப்பினர்கள் வ.பார்த்திபன், தயாளன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

(Vadamarachchi East fishermen forced stop fishing activities)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites