​ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் – கடம்பூர் ராஜூ!

0
791
sterlite plant closure kadambur raju chennai

sterlite plant closure kadambur raju chennai

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை நிகழ்ந்த பகுதிகள் மற்றும் சேதமடைந்த வாகனங்களையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.

பின்னர், வன்முறையின்போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சென்று அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று ஆறுதல் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, போராட்டம் நடைபெற்றபோது போராட்டக்காரர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், பயனில்லாததால், அதன் பின்பே வானத்தை நோக்கி முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்தார்.

அமைதியாக போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு அரசு அனுமதி அளித்த நிலையில், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் வன்முறை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதில் மக்களை போன்றே அரசுக்கும் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, உச்சநீதிமன்ற உத்தரவால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களில், 7 பேரின் உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தால் அரசும் துயரத்தில் பங்கேற்று உள்ளதாகவும், கடந்த 4 நாட்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்சியர், எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தற்போது போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இணைய சேவையை இன்று இரவுக்குள் மீண்டும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டார்.

More Tamil News

Tamil News Group websites :