யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

0
376
Demonstration price rise increased tax burden carried government

(Demonstration price rise increased tax burden carried government)

அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் விலை உயர்வு, வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 29.05.2018 செவ்வாய்க் கிழமை போயா தினத்தன்று மு.ப. 10 மணிக்கு யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கும் முகமாக அக்கட்சியின் வட பிராந்திய செயலாளர் கா. கதிர்காமநாதனினால் (செல்வம்) பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இன்றைய மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டாட்சியானது, முந்தைய மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களின் ஃபாசிச சர்வாதிகார ஆட்சியை 2015 இல் அகற்றி, நல்லாட்சி என்ற நாமத்துடன் பதவிக்கு வந்தது.

ஜனநாயகத்தை மீட்போம், அபிவிருத்திகளை முன்னெடுப்போம், பத்து லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்போம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு கொண்டுவருவோம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம், ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தி, அவற்றில் ஈடுபட்டோருக்குத் தராதரம் பார்க்காது தண்டனை வழங்குவோம் என்றவாறான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டாட்சிக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மலையகத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்கி தமக்குரிய பதவிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டன.

ஆனால், இன்றைய நிலைதான் என்ன? என்பதே சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

மக்களுக்கு அத்தியவசியமான உணவுப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் உயர்த்தப்பட்டு வந்து இன்று உச்சமாகி நிற்கின்றன.

அரிசி, சீனி, தேங்காய், மல்லி, மிளகாய், பருப்பு வகை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் நூறு, இருநூறு என ஏறிக்கொண்டே செல்கின்றன. அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் கூடவே, எரிவாயு 12.5 கி.கி 1,540 ரூபாவில் இருந்து 1,785 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவாலும், டீசல் 9 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 57 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பேருந்துக் கட்டணம் 12.5 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் முச்சக்கரவண்டிகள் உள்ளடங்கலாக ஏனைய வாகனங்களூடான போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் பெரும் வாழ்க்கைச் செலவுச் சுமையால் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்.

கடந்த அரசாங்கமும் இன்றைய ஆட்சியாளரும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடம் பெற்ற, பலகோடிக்கணக்கான கடன்களையும் அவற்றுக்கான வட்டிகளையும் மீளச் செலுத்துவதற்கு மக்களிடமிருந்து வரிகள்மூலம் பணத்தை வாரியெடுத்துக் கொள்கின்றார்கள்.

அந்நிய முதலீடுகளுக்கு நாட்டைத் திறந்துவிட்ட அதேவேளை, தாராளமயம், தனியார்மயத்தினூடாக அந்நியப் பொருட்களின் சந்தையாகி நுகர்வு மேலோங்கியது.

இதனால், நமது நாட்டின் விவசாயமும் சிறுஉற்பத்தித் தொழில்களும் சாகடிக்கப்பட்டன.

தேசிய பொருளாதாரம் நாசம் செய்யப்பட்டது. இது கடந்த நாற்பது ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நாசகார நவதாராள பொருளாதாரக் கொள்கையின் விளைவாகும்.

உலகமயமாதலினூடான தாராளமயமும் தனியார்மயமும் பெரும் ஊழல்களையும் மோசடிகளையும் சர்வசாதரணமாக்கிவிட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியே முன்னைய ஆட்சிகளிலும் இன்றைய ஆட்சியிலும் இடம்பெற்றுவருகின்றது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகளும், அவர்களின் உயர்மட்ட நிர்வாகிகளுமேயாவர்.

இன்றைய விலை உயர்வுகளும், கட்டண அதிகரிப்புகளும், கடன் சுமைகளும், ஊழல் மோசடிகளும் தவறான பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தல்களின் மோசமான எதிர்விளைவுகளேயாகும்.

இது மக்கள் விரோத முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் நவகொலனியத்தின் கீழான நவதாராள பொருளாதார நிகழ்ச்சி நிரலின் விளைவேயாகும். இதனால் கடும் பாதிப்பை உழைக்கும் மக்களே அன்றாடம் அனுபவித்து வருகின்றார்கள்.

இதை முன்னெடுப்பதில் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளின்றி முதலாளித்துவ சுரண்டல் சக்திகளும், அடக்குமுறை ஆட்சியாளர்களும் ஒரே அணியில் நிற்கின்றார்கள்.

இதில் தமிழ்த் தேசியத்தைக் கூவுகின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய குறுந்தேசியவாத சக்திகளும் அதே அணியில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, உழைக்கும் மக்கள் தமது ஒடுக்கப்படும் வர்க்க நிலையைப் பொருளாதார, அரசியல், சமூக நிலைகளின் அடிப்படையில் கண்டுணர்ந்து அனைவரும் ஓர் அணியில் அணிதிரளவேண்டும்.

கோரிக்கைகள் வெற்றிகொள்ளப்படும்வரை வெகுஜனப் போராட்ட மார்க்கத்தில் முன்னேறிச் செல்லவேண்டும். ஒன்றிணைவோம்! ஐக்கியப்படுவோம்! போராடுவோம்! இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அணிதிரளுமாறு அனைவரையும் அழைத்துநிற்கின்றோம். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Demonstration price rise increased tax burden carried government)

More Tamil News

Tamil News Group websites :