Australia Bee Export
அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் கால்நடை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை தடை செய்யும் சட்ட மூலம் ஒன்றை ஆளும் லிபரல் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுச்சன் ளெய் முன்வைத்துள்ளார்.
ஆனால் அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் தேனீக்கள் ஏற்றுமதி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் செய்தி உங்களுக்குத் தெரியுமா?
ஐ.நா சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது உலக ‘தேனீக்கள் தினம்’ கடந்த ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்ட பின்னணியில் தேனீ ஏற்றுமதி குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகித்து, மனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்கள் இவ்வுலகில் இல்லையென்றால் உலகம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்காது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது தேனீக்கள் அழிவைச் சந்தித்து வரும்நிலையில், தேனீக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், பயன்பாட்டையும் நாடுகள் உணரத்துவங்கியுள்ளன. எனவே தமது நாட்டின் விவசாயம் தொடர்ந்து பெருகவும், செழிக்கவும் வேண்டி, பல நாடுகள் தேனீக்களை பாதுக்காக்கவும், பிற நாடுகளிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யவும் துவங்கியுள்ளன.
அவுஸ்திரேலியாவிலிருந்து தேனீக்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில் கனடா நாடு முன்னிலை வகிக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கனடா நாடு மட்டுமே ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் நான்கரை கோடி தேனீக்களை இறக்குமதி செய்துள்ளது. ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக பல நாடுகளில் தேனீக்களை அழிக்கும் Varroa destructor mite எனும் உண்ணிகள் (பூச்சி) அவுஸ்திரேலியாவில் இல்லை என்பதால் பல நாடுகள் ஆஸ்திரேலிய தேனீக்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டுகின்றன.