2020 இல் கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை பிரகடனம் செய்யப்படும்

0
388
Sri Lanka declared not Landmine country 2020

(Sri Lanka declared not Landmine country 2020)
2020ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் கண்ணிவெடி அபாயம் இன்றி தமது சொந்த இடங்களில் மீள்குடியமர முடியும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கையை 2020ல் பிரகடனப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டிபியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சுவாமிநாதன் இதனைத் தெரிவித்தார்.

மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 300 குடும்பங்களுக்கு எப்போது மீள்குடியேற்றம் சாத்தியமாகும் என டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர்,

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அரசன்கேணி, வேம்படுகேணி, கிளாலி, முகமாலை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ள பிரதேசங்கள் தவிர்த்த ஏனைய எல்லா பிரதேசங்களிலும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெருமளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இங்கு 8.38 சதுர கிலோமீட்டர் பரப்பில் இவ்வாறு நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டிருந்தது. இதில் 3.61 சரது கிலோமீட்டர் பரப்பில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 4.78 சதுர கிலோமீட்டர் பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மீள்குடியேற்றம் முக்கிய பணியாக கருதப்படுகின்றது. அதற்கான இந்த அமைப்புகளின் மூலமாக குறித்த பிரதேசங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளோம். இவ்வாறு நிலக்கண்ணிவெடி அகற்றும் செயன்முறை சர்வதேச தரத்திற்கு அமைய இடம்பெற வேண்டியுள்ள காரணத்தினால் சர்வதேச பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், அதேபோல் மேலதிக நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளை இந்த பிரதேசங்களில் இருந்து அனுப்பிவைக்க முடியாத நிலைமையும் உள்ளது.

இதனால்தான் கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றக்கூடிய காலத்தைக் கூறமுடியாதுள்ளது. கண்ணிவெடி அகற்றும் ஒட்டாவா சமவாயத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருப்பதால் இது விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தியுள்ளோம். உலக நாடுகளின் கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்புகளுடன் இணைந்து 2020ஆம் ஆண்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கை கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்த எனது அமைச்சு செயற்பட்டு வருகின்றது என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :