மஹிந்தவும், முன்னாள் படை வீரர்களும் மறைமுக சதித்திட்டம் : அம்பலப்படுத்தும் பிரதமர்

0
737

(Mahinda former soldiers indirect conspiracy)
நாட்டில் மீண்டும் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான சதித்திட்டமொன்று வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில ஊடகங்கள் அதற்குத் துணை போய்க் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுடனும் மொட்டுத் தரப்பிலும் இணைந்திருக்கும் முன்னாள் படை வீரர்கள் இச்சதியில் முழுமையாக தொடர்புபட்டிருப்பதாகவும் நாட்டை மீண்டும் அராஜகத்தின் பக்கம் கொண்டு செல்ல மக்கள் தயாரா? எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர்களின் பின்னால் நின்று இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு ஒன்றைச் சொல்லி வைக்கின்றேன் ஊடகவியலாளர்கள் காணாமல் போகும் யுகத்தை மீண்டும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்பது தான் அது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை ஸ்ரீகொத்தாவில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது,

ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட கட்சியாகும். அத்துடன் இளம் தலைவர்களை தேசத்துக்கு அறிமுகப்படுத்தும் ஒரே கட்சி ஐ.தே.க. மட்டுமேயாகும். நவீன் திசாநாயக்க உள்ளிட்ட பல இளம் தலைவர்கள் இன்று ஐ.தே.கவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். தந்தையை போன்று சிறந்த அரசியல்வாதியாக திறமைமிக்கவராக நவீன் திசாநாயக்க காணப்படுகின்றார்.

கட்சி மறுசீரமைப்பு மூலம் பல புதிய இளம் தலைவர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இன்னும் பல புதியவர்கள் வரவிருக்கின்றார்கள். அன்று ஜே.ஆர். ஜயவர்தனவுடன் பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, சிறில் மெத்தியூ போன்றவர்கள் இணைந்து கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றனர். 1977 பாரிய வெற்றிக்கு அது வழிவகுத்தது.

1971 முதல் காமினி திசாநாயக்கவை நான் அறிவேன் 70 களில் வீழ்ச்சி கண்ட கட்சியை மீளக் கட்டியெழுப்ப அவர் பாரிய பங்களிப்பைச் செய்தவர்.

ஜே.ஆர். ஜயவர்தனவுக்குப் பின்னர் நாட்டை ஆளக் கூடிய வல்லமை கொண்ட தலைவராக அன்று காமினி திசாநாயக்க இனம் காணப்பட்டார். மிகக் கஷ்ட காலத்திலெல்லாம் கட்சியை பலப்படுத்தியவர் காமினி திசாநாயக்க ஆவார். அவரது மகன் இன்று கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்கின்றார். இவருடன் பல இளம் பரம்பரையினர் கட்சியின் பொறுப்பைச் சுமந்துள்ளனர்.

அடுத்த தசாப்தம் புதியவர்களின் தசாப்தமாகும். அடுத்த மூன்று மாதங்கள் பொறுப்புமிக்க காலப்பகுதியாகும். அது தொடர்பில் அடுத்த வாரம் கூடவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயவுள்ளோம்.

கட்சியின் அடுத்த தலைவராக வரக் கூடிய தகைமையுள்ளவர் இந்த இளம் தலைவர்களுக்குள் இருக்கின்றார். புதிதாக வரக்கூடிய இளம் பரம்பரையினரிலும் காணப்படலாம்.

புதிய தலைவர்களை அடையாளம் காட்டக்கூடிய ஒரே ஜனநாயகக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். பிரதான தலைவர் இரண்டாம் கட்டத் தலைவர் மூன்றாம் நிலைத் தலைவரென எம்மால் பட்டியலிட முடியும்.

அதற்குத் தகைமை கொண்ட கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே ஆகும். 2020 முதல் 2030 வரையான தலைவர்கள் யார் என்பதை வெளிப்படையாக காணக் கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலையில் தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட எதேச்சதிகார மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவர மொட்டுத் தரப்பு முனைகின்றது.

இந்த மொட்டுக் கட்சியை இயக்குவது யார் அரசியல்வாதிகளா? இல்லை முன்னாள் படை வீரர்களாவர். மஹிந்தவின் ஆட்சியில் அராஜகம் தலைவிரித்தாட துணை நின்றவர்கள் இவர்களே. அன்று லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தவர்கள், பிரகீத் எக்னலிகொடவைக் காணாமல் ஆக்கியோர் என அராஜக ஆட்டம் ஆடியவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். சில ஊடகங்கள் இதற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றன.

நாட்டைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பை இப்போது நாம் இளம் தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்பதை தீர்மானிப்பது நாட்டு மக்களிடமே தங்கியுள்ளது எனவும் பிரதமர் கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :