கதறியழும் தமிழ் உறவுகள்; கண்ணீரால் நிரம்பும் முள்ளிவாய்க்கால்

0
937
Crowds gather Mullivaikkal memorial ground ahead remembrance event

(Crowds gather Mullivaikkal memorial ground ahead remembrance event)
தமிழினப் படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

வடமாகாண சபை மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையிலான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல்லாயிரக்காண தமிழ் மக்களின் அழுகுரலுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான சுடரை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வழங்க, இறுதி யுத்தத்தின் போது தனது உறவுகளை இழந்த தாயொருவர் ஏற்றினார்.

இதன்பின்னர் அஞ்சலிச் சுடர்கள் உயிர்நீத்த உறவுகளாலும், பொது மக்களினாலும் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று முற்பகல் 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உயிர்நீத்தவர்களின் உறவுகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு தமது கண்ணீர் காணிக்கையை செலுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதகுருமார்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்விற்கு சென்ற வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், தமிழின அழிப்பு இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருப்பதற்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமைக்கும் சர்வதேசம் நீதியான நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வடமாகாணத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தை முற்றாக வெளியேற்றுமாறு வலியுறுத்தியதுடன், இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டியும் தான் பிரார்த்திப்பதாகவும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் முள்ளிவாய்க்கால் மண்ணை வந்தடைந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கறுப்பு ஆடை அணிந்து இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Crowds gather Mullivaikkal memorial ground ahead remembrance event