இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி

0
656
Tamils Commemorate Kumudini Boat Massacre

(Tamils Commemorate Kumudini Boat Massacre)
யாழ். குடாநாட்டைக் கலங்கடித்த இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை முன்னிட்டு, நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெடுந்தீவு பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் முரளி தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றதுடன், நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது.

படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த வேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று.

யாழ். குடாநாட்டைச் சூழவுள்ள சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் வாழும் மக்கள் தமது பெரும்பாலான தேவைகளை நிறைவு செய்ய யாழ். குடாநாட்டுடன் தொடர்புபட்டிருந்தனர்.

தீவையும் யாழ்ப்பாணத்துடன் தொடர்புபட்டிருந்த குறிகட்டுவானையும் பிரித்திருந்த 9 மைல் கடலாக காணப்பட்டமையினால் தீவுக்கான அனைத்துத் தொடர்புகளும் கடல் மார்க்கமாகவே இடம்பெற்றன.

பொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது.

இவர்களது வாழ்வோடு இணை பிரியாத ஒன்றாக இருந்தது குமுதினிப் படகு என்றே கூறலாம். ஆனால் இன்று படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி காணப்படுகின்றது குமுதினிப் படகு.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி காலை 7 மணியளவில் நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினிப் படகு அரைமணி நேர பயணத்தின் பின்னர், இரு பிளாஸ்ரிக் படகுகளில் முக்கோண கூர்க்கத்திகள், கண்டங் கோடரிகள், இரும்புக் கம்பிகள் சகிதம் ஆயுதம் தாங்கிச் சென்ற சீருடை தரித்தவர்களால் வழிமறிக்கப்பட்டது.

இதன் பின்னர் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் அவர்கள் கொல்லப்பட்டனர்.

குற்றுயிரானவர்கள் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் கிடந்தனர். பயணிகளில் சிலர் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றனர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவ்வாறான வெறித்தனமான தாக்குதலின் பின்னர் காயமடைந்தோர் புங்குடுதீவு வைத்தியசாலை, யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏழு மாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமின்றி நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இதுவரை ஜனநாயக நாட்டில் உரிய நீதி கிடைக்காது, வருடாவருடம் அந்த அப்பாவி மக்களை நினைவுகூருவது மாத்திரமே யதார்த்தமாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Tamils Commemorate Kumudini Boat Massacre