Canada Labour Market Wages
தொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, கனடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கனடாவின் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.8 சதவீதத்தில் நிலையாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் 1,100 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் நிலையாகவே உள்ளதாக கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
எனினும் ஊதியத் தொகையானது சுமார் ஆறு ஆண்டுகள் காணாத உச்சத்தினை கடந்த மாதத்தில் தொட்டுள்ளதாகவும், கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ள சராசரி ஊழியர் சம்பளத்தின் அளவானது, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன ஒப்பிடுகையில் 3.6 சதவீதம் அதிகம் எனவும், 2012ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகியுள்ள அதிகளவு சம்பள வீதம் இது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை வேலை வாய்ப்புத் தொடர்பில் கனேடிய மத்திய வங்கியின் பொருளாதார நிபுணர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கனடாவின் தொழிற்சந்தை ஓரளவு சிறந்த மட்டத்தினை தொட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில காலங்களுக்கு வேலை வாய்ப்புகளில் கணிசமான அதிகரிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அரிது என்று கூறியுள்ளார்.
எனினும் ஏற்கனவே உள்ள தொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும அவர் எதிர்வுகூறியுள்ளார்.
குறிப்பாக ஒன்ராறியோவின் அடிப்படை குறைந்தளவு சம்பளத்தில் கடந்த சனவரி மாதம் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநில அரசின் அந்த நடவடிக்கைக்கும் அப்பால் சம்பளத்தில் கடந்த மாதம் 2.9 சதவீதத்தில் இரு்நது 3.1 சதவீதமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.