யாழ். மாநகர முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு

0
1142
Jaffna Municipal Chief Minister abuse power

(Jaffna Municipal Chief Minister abuse power)
யாழ். மாநகர முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பில் வட மாகாண முதலமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். மாநகர சபையின் சகல விதமான செயற்பாடுகளும் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் 1 ஆவது சபை அமர்வை தொடர்ந்து சபை முழுமையான அதிகாரத்தின் கீழ் வந்தது.

இதன்பின்னர் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி மற்றொரு சபை கூட்டம் நடைபெற்ற போதும், சபையின் நிதிக்குழு உட்பட எந்தவொரு சபையின் உபகுழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில் சபையின் எந்தவொரு அனுமதியுமின்றி நிதிக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

மேலும், சபையின் எத்தகைய அனுமதியுமின்றி வீதிப் புனரமைப்பிற்கான கேள்விப்பத்திரக் கோரல் கடந்த 18 ஆம் திகதி பத்திரிகையில் முதல்வரின் பெயரில் வெளியாகியுள்ளது.

இந்தச் செயற்பாட்டுகளை மாநகர முதல்வர் தன்னிச்சையாக கையாண்டுள்ளார் என்பதனை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகள் மாநகர சபைக்கான சட்டவிதிமுறைகளை முற்றாக மீறும் செயலாகும் என்பதுடன் சபையில் பாரிய நிதி மோசடி அல்லது முறைகேடுகள் நடைபெறுகின்றனவோ என்ற பாரிய அச்சத்தை எமக்கு தோற்றுவித்துள்ளது.

அத்துடன் சபைக்கான உபகுழுக்களும் இதுவரை அமைக்கப்படாமல் சபையின் செயற்பாடுகளும் மாநகர முதல்வரினால் தன்னிச்சையாக செயற்படுத்தப்படுகின்றது என்பதனையும் தங்களது தாழ்மையான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

குறித்த உபகுழுக்களை உடனடியாக உருவாக்குவதற்காக உடனடியாக சபையின் விசேட கூட்டத்தை கூட்டுமாறு மாநகர சபை முதல்வருக்கு கடந்த 20 ஆம் திகதி கடிதம் மூலம் எமது உறுப்பினர்களால் கோரிக்கை விடப்பட்ட போதும் இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் 19 ஆம் திகதியிடப்பட்டும் மாநகர சபை முதல்வரால் கையப்பமிடப்பட்டும் மாநகர சபை இலட்சினையுடனான கடிதத் தலைப்பில் ‘மாநகர முதல்வரின் பிரத்தியேக இணைப்பாளர்’ நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்பாடானது மாநகர சபை சட்ட விதிகளுக்கு முரணானது என்பதுடன் மாநகர முதல்வர் தனது பதவிக்கான அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

இவற்றினைக் கருத்திற் கொண்டு இவற்றுடன் தொடர்புடையவர்கள் மீது உரிய விசாரணை நடாத்தி ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுத்து சபையின் செயற்பாடுகளை சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு நடைபெறுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என்று இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Jaffna Municipal Chief Minister abuse power