முள்ளிவாய்க்கால் நினைவு நாளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

0
618
tamilnews jaffna university students call may 18 prayer

(tamilnews jaffna university students call may 18 prayer)
தமிழரின் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நாளில் மறுக்கப்படும் நீதிக்காகவும் உரிமைக்காகவும் பேரெழுச்சியாய்த் திரள்வோம் அன்பார்ந்த தமிழ் மக்களே என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

நவீன யுகத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் மனிதப் பேரவலத்தின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாளை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம்.

மே-18 என்பது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த பெருந்துயருக்குரிய நினைவுநாள் என்பதையும் தாண்டி, ஈழத்தமிழினம் எதிர்கொண்ட அனைத்து இனவழிப்பையும் ஒருசேர நினைவுகொள்ளும் ஒருநாளாக – தமிழர் இனவழிப்பு நினைவுநாளாக – அமையப்பெற்றிருக்கின்றது.

ஈழத்தமிழினம் தனக்கிழைக்கப்பட்ட அநீதிகளையும் அவற்றின் விளைவான துயர்களையும் நினைவுகொண்டு, உலகிடம் நீதிவேண்டி வீறுகொண்டு போராட திடசங்கற்பம் பூணும் ஒருநாளாக இந்நாள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

எனவே, இந்த மே-18 நாளை எமது தமிழினம் எவ்வாறு கையாள்கிறது என்பது உலக அரங்கில் உன்னிப்பாய்க் கவனிக்கப்படுவதோடு தமிழர்களாகிய எமக்கும் எமது பலத்திரட்சியை வெளிப்படுத்தும் ஒரு களமாக அமைகின்றது.

கடந்தகாலத்தைப் போலன்றி இவ்வாண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்படும் நினைவுநிகழ்வானது தமிழரின் உணர்வையும், ஒற்றுமையையும், நீதிக்கான ஒருமித்த வேட்கையையும் தெளிவாக வெளிப்படுத்தும் விதமாக அமைய வேண்டுமென்ற அவாவோடு பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

ஒற்றுமை என்ற பேரில் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்யும் நோக்கமோ, தமிழர்களுக்கான நீதிவேண்டிய பயணத்தில் முட்டுக்கட்டைகளாக இருப்போரை அரவணைக்கும் நோக்கமோ, தனிப்பட்ட கட்சிகளுக்கோ அரசியற் பிரமுகர்களுக்கோ மேடையமைத்துக் கொடுத்து சிலருக்கு அரசியல் இலாபம் தேடிக்கொடுக்கும் நோக்கமோ எமது ‘ஒன்றுபட்ட நிகழ்வுக்கான அழைப்பின்’ பின்னால் இல்லை.

மாறாக, வலிசுமந்த மக்களின் உணர்வுகளை மதித்து, அங்கிங்கென்று பிரிந்து நடக்கும் நிகழ்வுகளைத் தவிர்த்து, ஓர் உணர்வுபூர்வமான நிகழ்வையும், ஒருங்கிணைந்த மக்கள் திரட்சியையும் வெளிக்கொணர்தலே எமது நோக்கமாகும்.

வலிசுமந்த மக்களை முன்னிறுத்தியதாகவே இந்த ஒன்றிணைந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கான ஏற்பாட்டை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அம்மக்களின் முன்னால் தோன்றி இந்நிகழ்வில் பங்கேற்க தனக்குத் தகுதியிருப்பதாக மனச்சாட்சியுடன் சிந்திக்கும் அரசியல்வாதிகள் தாமாகவே முன்வந்து கலந்துகொள்வார்கள், மற்றவர்கள் தாமாக விலகியிருப்பார்கள் என நாம் நம்புகின்றோம்.

யார் யார் கலந்துகொள்ள அருகதையுள்ளவர்கள் என்பதை மக்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

ஆண்டாண்டு காலமாக பொய்களையும் புரட்டுக்களையும் மக்களுக்குக் கூறி அரசியல் செய்தோர், இனவழிப்புப் போரில் எதிரியின் பக்கம் நின்றோர், நீதிக்கான தமிழரின் பயணத்தை நீர்த்துப்போக வைக்க முயன்றோர், தகா உறவுகளை அரசியற்கூட்டாக்கி வைத்திருப்போர் எல்லோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்பு தம்மைச் சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்.

உளத்தூய்மையுடன் மக்கள் நலன்சார்ந்தும் இனவிடுதலை சார்ந்தும் உழைப்போர் அனைவரும் இந்த ஒன்றுதிரண்ட நிகழ்வுக்கான அழைப்பையேற்று அணிதிரளுங்கள்.

உலக அரங்கில் பல்வேறு வழிகளில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எமது இனம் தனக்கு மறுக்கப்பட்ட நீதியைப் பெறும் போராட்டத்துக்கான அணிதிரள்வையும் புத்தூக்கத்தையும் பெற்றுக்கொள்ளும் ஒருநாளாக இந்த மே-18 நாளை மாற்றுவோம்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்த நினைவுநாளில் ஒற்றுமையாக அணிதிரண்டு எமது வேட்கையை உலகுக்குணர்த்துவோம்.

உலகம் முழுவதும் நடைபெறும் மே-18 நிகழ்வுகளுக்கெல்லாம் சிகரமாய்த்திகழும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடக்கும் நினைவுநிகழ்வை சிறப்புற நடாத்த மக்களினதும், இனவிடிவிற்காய் உழைக்கும் சகலரினதும் ஒத்துழைப்பையும் தமிழ்மக்களின் உரிமைக்குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக சமூகம் வேண்டி நிற்கின்றது.

உங்களின் பசியைத் தீர்த்து வைக்காமல் எங்களின் உணவை தொடமாட்டோம் என்று மக்களை பார்த்துக் கூறும் உளத்தூய்மையும் உங்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்ற உயிரையும் பிழிந்து கொடுப்போம் என்று மக்களை பார்த்துக் கூறும் நெஞ்சுரமும் உங்களிடம் இருப்பதாக எவரெல்லாம் மானசீகமாக உணர்கிறீர்களோ அவரெல்லாம் மறுக்கப்படும் நீதிக்காகவும் ஏமாற்றப்படும் தமிழ் சமூகத்திற்காகவும் முள்ளி வாய்க்கால் பேரவலத்தினை நினைவு கூர அணி திரளுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

(tamilnews jaffna university students call may 18 prayer)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :