ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கும் வரிச்சலுகையோடு இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் விடயத்தை இணைக்கவும் பயங்கரவாதத் தடை சட்டத்தை சர்வதேச சட்டங்களுக்கு இசைவாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இளைய தலைமுறையினால் தலைமை தாங்கப்படும் புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பினால் (Tamil Diouspora Alliance) இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதே நேரம் கீச்சகத்தில் இதற்கு ஆதரவான பிரசாரத்திலும் இவ் அமைப்பினர் இறங்கியுள்ளனர். தாயகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு ஆதரவாக கையெழுந்திட்டு வருகின்றனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டில் உள்ள மக்களை மட்டுமன்றி புலம்பெயர் மக்களை தாயக மக்களோடு உறவாடுவதற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கான அபிவிருத்தி மீள் கட்டுமான பணிகளை செய்வதற்கும், இணைந்த தேசிய வாழ்வை துய்ப்பதற்கும் அச்சுறுதலாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மறுபுறம் ஐரோப்பிய யூனியன் விடுதலை புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சு முயற்சியில் முக்கிய பங்காளர் என்ற வகையில் அந்த பேச்சு முயற்சியின் தோல்விக்கும் பேரழிவுக்கும் பொறுப்பை கொண்டது.
அந்தத் தார்மீக பொறுப்பை ஏற்று இலங்கையில் நிலைத்து நீடிக்கும் சமாதானத்தை நிலைநாட்ட இன்றுள்ள இலங்கையின் சூழ் நிலையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதற்காக ஒர் அரசியல் தீர்வு இலங்கையில் எட்டப்படுவதற்கு ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கான தனது வரி சலுகையை ஒரு கருவியாக பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் அதில் கோரிக்கை வைத்துள்ளது.
