க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைகள் திணைக்களம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. Army Jam Signal Advance Level Exam
பரீட்சையின் போது கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களின் பாவனையை தடுக்க அவற்றுக்கான வலையமைப்பினை தடுக்கவே இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
பரீட்சையின் போதான முறைகேடுகளை தடுப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்களைத் தொடர்ந்தே பரீட்சைகள் திணைக்களம் இம்முடிவை எடுத்துள்ளது.
குறிப்பிட்ட இடங்களில் சிக்னல்களை தடுக்கும் திறன் இராணுவத்திடம் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
பரீட்சைகள் திணைக்களத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய பரீட்சைகளின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி மோசடிகள் இடம்பெற்றமையை கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்காக தொலைதொடர்பு நிலையம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உதவியும் பெறப்படவுள்ளது.