ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி

0
91

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான ஈழத் தமிழர்களில் ஒருவரான சாந்தனை இலங்கை செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற இலங்கையைச் சேர்ந்த சாந்தன், சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு செல்ல சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இதற்கான பயண ஆவணத்தை வழங்கியுள்ளது. எனினும் இந்த பயண ஆவணம் எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரைதான் செல்லுபடியாகும்.

எனவே இலங்கைக்கு சாந்தன் சென்றாலும் அவர் ஆகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்பாக இந்தியா திரும்ப வேண்டும். அல்லது பயணத்தை நீட்டிக்க இலங்கை அரசிடம் அனுமதி கோர வேண்டும்.

இந் நிலையில் சாந்தன் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இலங்கை தூதரகத்திடம் உரிய அனுமதி பெற்ற பின் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றம் விடுவிப்பு

முன்னாள் இந்தியப் பிரதமரின் படுகொலைக்கு உதவியதற்காக டி சுதேந்திரராஜா எனப்படும் சாந்தன் மேலும் ஆறு பேருடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் 2022 நவம்பரில் ஒரு திருப்புமுனையான நிகழ்வுகளில் ஏழு நபர்களையும் சென்னைமேல் நீதிமன்றம் விடுவித்தது.

பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு மையமான சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர், அங்கு அவர்கள் 2022 நவம்பர் முதல் அடைக்கப்பட்டுள்ளனர்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினையால் பாதிப்பு

அண்மையில் சாந்தனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சாந்தன் கடுமையான கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக மருத்துவ சிக்கல்களின் விளைவாக சாந்தன் மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சாந்தனின் தாயாரின் வேண்டுகோள்

சாந்தனின் தாயார் தனது மகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் இலங்கைக்கு அழைத்து வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது மகனைத் துரிதப்படுத்த தலையிடுமாறு கோரி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்ததை அடுத்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.