பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அகிம்சை வழிப் போராட்டம்- அனைத்துத் தரப்பிலும் முழு ஆதரவு!

0
539

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை மறுதினம் மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை நான்கு நாட்கள் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துவதற்கு அறிக்கை வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.