சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு: பிரபல ரவுடிக்கு தொடர்பிருப்பதாக தகவல்

0
40

பிரபல நடிகர் சல்மான் கானின் வீடு மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி காலை 5 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் வந்த மர்ம நபர்களால் குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் கான் வீட்டு முன்பு போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விசாரித்தபோது குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரபல ரவுடி லோரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஆகிய இருவருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.

இருவரில் லோரன்ஸ் பிஷ்னோய் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் அன்மோல் பிஷ்னோய்க்கு மும்பை பொலிசாரால் கவன அறிவிப்பு சுற்றறிக்கை (Look out notice) பிறப்பிக்கப்பட்டுள்ளது.