மரண தண்டனையிலிருந்து தப்பிய கைதி 34 ஆண்டுகளுக்குப் பிறகு கைது: விசாரணையின் பின்னணியில் மறைந்திருந்த மர்மங்கள்!

0
67

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் வடு ஆராச்சிகே அமரசிறி என்பவரை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கடந்த 34 வருடங்களாக தனது மனைவியுடன் தலைமறைவாக வாழ்ந்துவந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பூகொடையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உதவி பொலிஸ் அதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியான கொலம்பகே சரத்சந்திர சுமணசேகர என அழைக்கப்படும் நந்தன சுமனசேகர முன்னணி நிறுவனமொன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த குற்றவாளி தனது மனைவியின் ஆதரவுடன் மின்சார சபையின் பொறியியலாளர் உடலை துண்டாக்கி பீப்பாயில் மறைத்து வைத்திருந்தார்.

அவரது மனைவி கடந்த பெப்ரவரி மாதம் பண்டாரகமவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையிலேயே குறித்த குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் நீண்ட விசாரணைக்கு பின் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

உயிரிழந்த நபர் ஒருவரின் பெயரில் பிறப்பு சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையை இவர்கள் போலியாக தயாரித்து வைத்திருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த போலியான பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தயாரிக்க கிராம உத்தியோகத்தர் ஒருவரின் ஆதரவை குற்றவாளி பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகொட, எம்புல்கம வீதியில் உள்ள வெலிப்பில்லேவ வீடொன்றில் மின்சார சபையின் பொறியியலாளர் படுகொலை செய்யப்பட்டார்.

ஒரு பிள்ளையின் தாயான ஏ.டபிள்யூ. கமனி சம்பிகா என்ற குற்றவாளியான பெண் (தற்போது 66 வயது) படுகொலை சம்பவம் இடம்பெற்ற போது 32 வயதுடையவர். பொறியாளருடன் தொடர்பு வைத்திருந்த அவர் மின்சார சபை தலைமை அலுவலகத்தில் தட்டச்சராகப் பணிபுரிந்தார். அங்கு அமரசிறியும் பணியாற்றியிருந்தார்.

இருவரும் இலங்கை போக்குவரத்து சபையில் நேரக் கண்காணிப்பாளராக பணிபுரியும் தனது கணவருடன் வெலிப்பில்லேவ ஸ்ரீ சுமண மாவத்தையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.

இந்த பெண்ணின் கணவனால் பொறியியலாளர் கொல்லப்பட்டார். அவரது கணவருக்கு குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நபர் தனது மனைவியின் விவகாரம் குறித்து அறிந்து தனது மனைவி தான் வெளியூர் சென்றிருந்த போது பொறியாளரை தனது வீட்டில் சந்திப்பதை அறிந்த பின்னர் அவரை தனது வீட்டிற்கு அழைக்குமாறு மிரட்டியுள்ளார்.

அவர் வந்தவுடன் பெண்ணின் கணவர் அவரை வெட்டிக் கொன்றுவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என பொறியியலாளரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் பொறியியலாளரின் வாகனம் மின்சார சபை அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவருடன் மின்சார சபையில் பணிபுரியும் தட்டச்சருடன் தொடர்பு வைத்திருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அவரது வீட்டை சோதனையிட்ட பொலிஸார் அந்த பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் காணாமல் போனதையும் கண்டுபிடித்தனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு, தம்பதியைக் கைது செய்த பொலிஸார் புதைக்கப்பட்ட உடலை மீட்டுள்ளனர்.

தம்பதியினர் ஹோமாகம நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 1990ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பிணையைப் பெறுவதற்காக போலியான சரீரப் பத்திரங்களையும் ஆவணங்களையும் தயாரித்ததாகக் கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.