சாந்தனின் மறைவுக்கு அனுதாபம் வெளியிடாத தமிழ்த் தேசியக் கட்சிகள்: அஞ்சலி நிகழ்வை பொறுப்பேற்ற கோமகன்

0
79

சந்தனின் மறைவுக்குத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரை அனுதாபம் எதனையும் வெளியிடவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரூவிற்றர் தளத்தில் அனுதாபம் வெளியிட்டிருக்கிறார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அவர் அனுதாபம் தெரிவித்திருந்தார். தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனிப்பட்ட முறையில் அனுதாப அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் கட்சிகளாகவோ அல்லது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்த கூட்டு அனுதாபமாகவோ இதுவரை அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்தியா மீது குற்றம் சுமத்திப்பட்டிருந்த அந்த அறிக்கையில் ஈழத்தமிழர் மீதான அரசியல் பழிவாங்கல் குறித்தான பின்புலங்கள் வெளிப்பட்டிருந்தன. மாணவர்களின் அறிக்கையில் காந்தி தேசத்தின் செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்களும் உள்ளடங்கிருந்தன.

சென்னையில் இருந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடலை வவுனியாவில் வைத்து அல்லது யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்பேற்க விரும்பியிருந்தனர்.

முருகையா கோமகன்

ஆனாலும் சாந்தனின் பூதவுடலைப் பொறுப்பேற்று அஞ்சலி நிகழ்வுகளையும் செய்யும் ஏற்பாடுகளை சாந்தனின் குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகனிடம் கையளித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒருவன் செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்ட கோமகன், பொதுமக்கள் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகளைத் தமது அமைப்பு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

அதேவேளை தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் அஞ்சலி நிகழ்வில் உரையாற்ற இடமளிக்க முடியாதென சாந்தனின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாகவும் அறியமுடிகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தியை வரவேற்ற கோமகன், அவருடன் இணைந்து சாந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றார்.

இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் சட்டவிதிகளுக்கு அமைவாக சாந்தனின் பூதவுடல் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்படும் வரை அங்கு நின்ற கோமகன், அஞ்சலி நிகழ்வு ஏற்பாடுகளுக்காக நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.