சக அமைச்சர் சாதியை அறிய விக்னேஸ்வரன் அனுப்பிய மெயில்!

0
173

தமிழர் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் சக அமைச்சர் ஒருவரது சாதியை அறிவதற்காக அனுப்பியதாகக் கூறப்படும் ஈமெயில் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது.

அது குறித்து இதுவரை அவர் அங்கம் வகித்த – அங்கம் வகிக்கின்ற எந்தக் கட்சியும் மறுப்பறிக்கை விடவில்லை. அதேபோல தமிழ் மக்களின் அதிக விருப்பு வாக்குகளினால் முதலமைச்சராகி பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் எவ்வித மறுப்பறிக்கையும் விடவில்லை.

சாதி விசாரிப்பு 

எனவே இந்த சாதி விசாரிப்பு ஈமெயில் மெய்யானது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அந்த முடிவிலிருந்து பின்வரும் விடயங்களைப் பகிரவேண்டியுள்ளது. கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான சாதியத்தை நம்பும் – பின்பற்றும் ஒருவர் தமிழ் தேசியம் பேசினால் அவரால் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க முடியும்.

வாக்கிற்கு சாதியிருப்பதில்லை. வாக்களித்த பின்னரே சாதி பார்க்கப்பட வேண்டும் என்கிற பிற்போக்குத்தனமான நரித்தனமான சிந்தனையின் அரசியல் செயற்பாட்டு வடிவமாகவே சி.வி. விக்கினேஸ்வரன் வலம் வருகின்றார்.

சக அமைச்சரின் சாதியை அறிய விக்கினேஸ்வரன் அனுப்பிய ஈமெயில் | Vikineswaran S Email To Know Caste Fellow Minister

பக்திமான், தமிழ் புலமை, வெண்ணிற ஆடை போன்றன எல்லாவிதமான பிற்போக்குத்தனங்களையும் மறைக்கும் கருவி மாத்திரமே தவிர தனி மனித ஒழுக்கத்தின் விழுமியங்கள் அல்ல. அதனைப் போர்த்திக்கொண்டு எத்தனை காலத்துக்கும் எல்லா தமிழ் மக்களையும் ஏமாற்றலாம்.

அதுவும் வாழவேண்டிய தமிழ் இளையவர்களின் செந்நீராலும் கண்ணீராலும் வளர்க்கப்பட்ட தமிழ் தேசியத்தைத் தம் கதிரை அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொள்ள எவ்வித கபடங்களையும் செய்யலாம். இந்த இழி செயலுக்கு எந்தத் தண்டனைகளும் கிடையாது. எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது.

மக்களுக்குத் தலைமைதாங்கும் தம் கட்சியைச் சார்ந்த ஒருவரது இவ் இழி செயலுக்கு எந்தக் கட்சியும் காரணம் கேட்காது. கள்ள மௌனமே காக்கும். இது விடயத்தில் சி.வி. விக்கினேஸ்வரனிடம் அவரை அரசியலுக்கு அறிமுகம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் கேள்வியெழுப்பவில்லை.

தற்போது அவரைக் காவிச் செல்லும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டமைப்பும் எதுவும் கேட்கவில்லை. அவரிடம் கேட்காவிட்டாலும் தாம் பொறுப்புச் சொல்ல வேண்டிய மக்களிடம் கூட வாய் திறக்கவில்லை.

ஏனெனில் இந்த விடயத்தில் தீவிர தமிழ் தேசியம் பேசும் இரு கட்சிகளுமே மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்கிற நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றன. ஏனெனில் இங்கு இயங்குகின்ற அனைத்துக் கட்சிகளுமே சாதிய வாக்குகளைக் கணக்கிட்டுப் பொறுக்கிக் கொள்வதற்குத் தனி வாய்ப்பாடொன்றையே வைத்திருக்கின்றன.

அடுத்தவரிடம் எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ அவரது சாதியை பற்றி வினவுவது என்பது ஒரு வகையான வெறுப்புப் பேச்சுத்தான். சக மனிதரது ஒதுக்கிவைக்க எடுக்கும் முதல் முயற்சிதான்.

சக மனிதருக்குள்ள சமத்துவத்தை மதியாமையின் வெளிப்பாடுதான். எவ்விதத்திலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் துயரம் என்னவென்றால் இலங்கையின் நீதித்துறையின் உச்ச பதவியான நீதியரசர் பதவியையும் வட மாகாண மக்கள் ஜனநாயக ரீதியில் அதிக விருப்பு வாக்குகளால் தெரிவுசெய்து வழங்கிய முதலமைச்சர் என்கிற தலைமைத்துவப் பொறுப்பையும் யாழ்ப்பாண மக்கள் இணைந்து வழங்கிய தம் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் வைத்திருக்கும் ஒருவரின் உச்சபட்ச மனித விழுமியம் இதுதான்.

-Jera Thampi

Gallery