ஜேர்மனியில் 12 வயது சிறுமி ஒருத்தியை அவளது தோழிகளே கொடூரமாக குத்திக் கொலை செய்த விடயம் நாட்டையே உலுக்கியது.
திட்டமிட்டு செய்த கொலை
ஜேர்மனியின் Freudenberg நகரில் வாழ்ந்துவந்த Luise F என்னும் 12 வயது சிறுமி மாயமான நிலையில், அவளது உயிரற்ற உடல் வனப்பகுதி ஒன்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அவளது உடலில் கூர்மையான ஆயுதம் ஒன்றால் குத்தப்பட்ட 32 காயங்கள் இருந்தன.
விசாரணையில், Luiseஉடைய தோழிகளான 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், தாங்கள் Luiseஐ குத்தியதாகவும், இரத்த வெள்ளத்தில் கிடந்த அவளை சாகவிட்டு விட்டு வந்துவிட்டதாகவும் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், Luiseஐக் குத்திக் கொன்ற சிறுமிகளில் ஒருத்தி, அவளைக் கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்பு டிக் டாக்கில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளாள்.
அதில், Luiseம், அவளைக் கொலை செய்த சிறுமிகளில் ஒருத்தியும் சிரித்து மகிழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அந்த சிறுமி இதைச் செய்தாளா என்பது தெரியவில்லை.
கொலைக்கான காரணம் என்ன?
ஜேர்மனியைப் பொருத்தவரையில், 14 வயதுக்குட்பட்டவர்களை கிரிமினல் விசாரணைக்குட்படுத்தமுடியாது என்பதால், அவர்களை பொலிசாரால் முறைப்படி விசாரிக்க முடியாது. அவர்களைக் குறித்த தகவல்களையும் வெளியிடமுடியாது.

ஆனாலும், Luise, பள்ளியில் பிற மாணவிகளால் வம்புக்கிழுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் (bullied), ஒரு பையனுடன் பழகுவது தொடர்பில் Luiseக்கும், அவளது தோழிகள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குற்றம் செய்துவிட்டு தண்டனையே இல்லாமல் தப்பிவிடுவார்களா?
ஆக, இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு அந்த சிறுமிகள் இருவரும் வயது காரணமாக தண்டனையிலிருந்து தப்பி விடுவார்களா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
ஜேர்மன் நீதித்துறை அமைச்சரான Marco Buschmann, சிறுமிகளானாலும் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் அந்த இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள், இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துள்ளவர்கள் தண்டிக்காமல் விடப்படக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

இதற்கிடையில், அந்த சிறுமிகளுக்கு தண்டனையாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அந்த சிறுமிகள் இருவரும் இழப்பீடு வழங்கவேண்டும் என சிவில் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, அந்த சிறுமிகள் இருவரும் வளர்ந்து, வேலைக்குச் செல்லத் துவங்கியதிலிருந்து, 30 ஆண்டுகளுக்கு, அவர்களுடைய சம்பளத்திலிருந்து ஒரு தொகை கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்படலாம் என கருதப்படுகிறது.
