இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; சாகல ரத்நாயக்க வெளியிட்டுள்ள தகவல்

0
59

வடக்கு, கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் பல வருடங்களாக தீர்க்கப்படாமலுள்ள முப்படையினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சம்பள பிரச்சினை, ஓய்வுதியக் கொடுப்பனவிலுள்ள சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சாகல ரத்நாயக்க தலைமையில் முப்படையினரின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது முப்படையினரின் தீர்க்கப்படாத 11 பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டதோடு, அவற்றில் இரண்டு தவிர்ந்த ஏனைய அனைத்திற்கும் தீர்வினை வழங்குவதற்கு சாகல ரத்நாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; ஜனாதிபதி தரப்பு வெளியிட்டுள்ள தகவல் | A Problem Faced By Military Personnel President

முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளால் சுமார் 7000 இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தக் கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற முப்படையினருக்கு அவர்களுக்கான பகுதிகளில் 5 ஆண்டுகள் நிறைவடையாததால் 85 சதவீத ஓய்வூதிய இழப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து விரிவான அறிக்கையை ஏப்ரல் 05 க்கு முன் சமர்ப்பிக்குமாறு சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாத செயற்பாடுகளால் அல்லாத வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த போது வீர மரணமடைந்த போர் வீரர்களின் குடும்பத்தினருக்கு நிலையான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காண இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

அதே போன்று பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சம்பளத்தை தயாரிப்பதற்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சம்பளத்தை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு இராணுவத்தளபதியின் பரிந்துரையை மாத்திரம் கவனத்தில் கொண்டு சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாறான ஒன்பது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கிய சாகல ரத்நாயக்க, எஞ்சிய இரண்டு கோரிக்கைகள் தொடர்பிலும் விரிவான தகவல்களை வழங்கப்பட்ட பின்னர் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.