உகாண்டாவை சேர்ந்த கிராமவாசி ஒருவர் 12 திருமணம் செய்துகொண்டு 102 பிள்ளைகளுடனும் 578 பேரப்பிள்ளைகளுடனும் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
புடலேஜா மாவட்டத்தின் புகிசா கிராமத்தை சேர்ந்த 68 வயது மூசா ஹசஹ்யா கசேரா என்பவரே அந்த நபர். உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும் மிகப்பெரிய இந்த குடும்பத்திற்கு எஞ்சியுள்ளது வெறும் 2 ஏக்கர் நிலம் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அடிப்படை வசதிகளான கல்வி, உணவு மற்றும் உடை என எதையும் அளிக்க முடியவில்லை என கூறி தமது இரு மனைவிகள் விட்டுவிட்டு சென்றதாகவும் மூசா ஹசஹ்யா கசேரா கூறியுள்ளார்.
வேலை ஏதும் இல்லாமல் இருக்கும் அவர் தமது பிரமாண்ட குடும்பத்தை சந்திக்க சுற்றுலாப் பயணிகள் அதிகம் இந்த கிராமத்தில் வந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய முறைப்படி 1972ல் தமது 17வது வயதில் முதல் திருமணத்தை செய்து கொண்டுள்ளார் மூசா ஹசஹ்யா கசேரா.

ஓராண்டுக்கு பின்னர் முதல் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சகோதரர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் திருமணம் செய்து கொண்டு பல பிள்ளைகளுக்கு தந்தையானதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூசா ஹசஹ்யா கசேராவுக்கு 10ல் இருந்து 50 வயது வரையில் மொத்தம் 102 பிள்ளைகள் உள்ளனர். இவரது இளம் வயது மனைவிக்கு வயது 35 என்றே கூறுகின்றனர். மேலும் சொந்த பிள்ளைகளின் பெயர்களை கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத சூழல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.