தமிழர்களே ரணிலின் வலையில் சிக்கி ஏமாறாதீர்கள்; அனுரகுமார!

0
142

“அரசியல் தீர்வு என்ற பெயரில் தமிழ்ப் பிரதிநிதிகளைப் பேச்சு மேசைக்கு அழைத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏமாற்ற முயற்சிக்கின்றார். ரணிலின் இந்தச் சதி வலையில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று தமிழ் மக்களிடமும், அவர்களின் பிரதிநிதிகளிடமும் ஜே.வி.பி. கேட்டுக்கொள்கின்றது.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஜனாதிபதி கதிரையில் அமர்த்தப்படுள்ள ரணில் விக்கிரமசிங்கவை விரைவில் வீட்டுக்கு அனுப்பியே தீருவோம். ரணிலை விரட்டும் ஜனநாயகப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் கட்சி பேதமின்றி இணைய வேண்டும்.

மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதியாகிய ரணிலை நம்ப வேண்டாம் என்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஊழல், மோசடி இல்லாத கட்சி ஜே.வி.பியே.எனவே, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் நாம் நாடு தழுவிய ரீதியில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஜே.வி.பியின் ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குக் காலத்தை இழுத்தடிக்காமல் தீர்வை நாம் வழங்குவோம். ரணில் தலைமையிலான அரசுக்குப் பாடம் புகட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

தேர்தல் உரிய திகதியில் நடத்தப்பட வேண்டும். மக்கள் தங்கள் வாக்குகளால் இந்த அரசுக்குப் பதிலடி வழங்க வேண்டும்” என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.