‘பாம்புகள், எங்களுக்கு குழந்தை மாதிரி’: ‘பத்மஸ்ரீ’ விருதுக்கு தேர்வான பாம்பு பிடி வீரர்கள்

0
106

செங்கல்பட்டு மாவட்டம், தென்னேரியைச் சேர்ந்த வர்கள் மாசி சடையன்(45), வடிவேல் கோபால்(52) பாம்புகளை பிடிக்கும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு, சமூக சேவை பிரிவில் பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம், புகழூரில், டி.என்.பி.எல். காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் நேற்று பாம்புகளை பிடிக்கும் பணிக்கு வந்த மாசி சடையன், வடிவேல் கோபால் கூறியதாவது:

டி.என்.பி.எல்.ஆலையில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பாம்புகளை பிடிப்போம். கடந்த 10 நாட்களாக ஆலை மற்றும் குடியிருப்பு பகுதியில் 14 பேர் கொண்ட குழுவினர் நுாற்றுக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து உள்ளோம்.


கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கிறோம். அதற்காக உருவாக்கப்பட்ட சங்கத்தில் 350 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். அதில் பெண்களும் உள்ளனர். விஷத்தன்மை உடைய கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை, நல்ல பாம்புகளை அதிக அளவில் பிடித்துள்ளோம்.

அமெரிக்கா, தாய்லாந்து நாடுகளில் இரண்டு மாதங்கள் தங்கி நுாற்றுக்கும் மேற்பட்ட கொடிய விஷ பாம்புகளை பிடித்து உள்ளோம்.

பிடித்த பாம்புகள் அனைத்தையும் அடர்ந்த காடுகளில் விட்டு விடுவோம். பாம்புகள் எங்களுக்கு குழந்தை மாதிரி. அவற்றை துன்புறுத்தவோ, கொல்லவோ மாட்டோம்.

பாம்புகளின் இருப்பிடத்தை எச்சம், கழிவுகள் மற்றும் நறுமணத்தை வைத்து லாவகமாக உயிருடன் பிடித்து விடுவோம்.

ஒருவேளை பாம்பு கடித்தால் முன்னோர் கூறியுள்ள மூலிகைகள் மூலம் முதலுதவி செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வோம்.

எங்களுக்கு பத்மஸ்ரீ விருதால் அங்கீகாரம் கிடைத்துள்ளது. எங்கள் சமூகத்தினருக்கு அரசு வேலை, வீடு வசதியை மத்திய, மாநில அரசுகள் தர வேண்டும் என கூறினர்