களவாக இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள்!

0
110

அரசாங்கத்திற்கு வரி வருவாயைப் பாதிக்கும் வகையில் பதிவு செய்யாமல் கையடக்க தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடன் நேற்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் இதனை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், இவ்வாறு கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்ததன் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உண்டியல் முறையின் ஊடாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

3.5 பில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு

இதன் மூலம் அரசாங்கத்திற்கு 3.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் மதிப்பிட்டுள்ளது. அதோடு பதிவு செய்யாமல் கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கையடக்க தொலைபேசிகள் களவாக இறக்குமதி! | Mobile Phones Imported Into The Field

இதன் காரணமாக , அந்த கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் எவ்வித தகவலையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து நாட்டின் வரி வருமானம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.