மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம்!

0
365

புதிய கட்டண முறையை நடைமுறைப்படுத்திய முதல் மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனவே நிதி நெருக்கடி மற்றும் நஷ்டம் காரணமாக தொடர்ந்து மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்ற கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சை

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் போது தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்திருந்த போதிலும் வழமையான தினசரி மின்வெட்டு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

பரீட்சை இடம்பெறும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியான மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அண்மையில் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

எனினும், கடந்த இரண்டு நாட்களாக திட்டமிட்டபடி தினசரி மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம்! | Income Of 108 Billion Rupees Electricity Board

உடன்படிக்கைகளுக்கு முரணாக செயற்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்த அல்லது அவமரியாதை செய்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றில் முறைப்பாடு அளிப்போம் என ஆணைக்குழு நேற்று மின்சார சபைக்கு அறிவித்தது.

இதனையடுத்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை இலங்கை மின்சார சபைக்கு தற்போது அறிவித்துள்ளதோடு நேற்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.