கரைஞ்ச மீன் சட்டிக்குள் இல்லை…?

0
383

தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது.தேசிய அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டும் அரசியற் செய்முறைதான்.இந்த அடிப்படையில் சிந்தித்தால் கடந்த சில நாட்களாக நடந்து வருபவை நிச்சயமாக தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்ல.

தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்ததன் உள்நோக்கம் பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளுவதுதான்.வீட்டுச் சின்னத்தைக் கைவிட்டால் பங்காளிக் கட்சிகள் வெல்ல முடியாது என்று தமிழரசு கட்சி நம்புகின்றது.கடந்த பொதுத் தேர்தல் அந்த நம்பிக்கையைத் தோற்கடித்து விட்டது.எனினும் தமிழரசு கட்சி அப்படி நம்புகிறது.எனவே பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளியதன் மூலம்,தமிழரசுக் கட்சி அக்கட்சிகளுக்கு ஒரு சவாலை முன்வைக்கின்றது.வீட்டு சின்னம் இல்லாமல் வென்று காட்டுங்கள் என்பதே அந்தச்சவால்.

ஆனால் அந்தச் சவாலை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாமல், தந்திரமாக ஒரு கணிதபூர்வமான காரணத்தை முன்வைக்கிறார்கள்.உள்ளூராட்சி மன்றங்களில் கலப்புத் தேர்தல் முறைமை காரணமாக வெற்றி வாய்ப்புகள் குறைவதை தடுப்பதற்காக இவ்வாறு பங்காளி கட்சிகளை தனியே போட்டியிடுமாறு கேட்டதாக அவர்கள் காரணம் கூறுகிறார்கள்.அதன்படி பிரிந்து நின்று வாக்கு கேட்டு, அவரவர் தங்கள் தங்கள் பலத்தை நிரூபித்தபின் ஒன்றாகச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களை நிர்வாகிக்கலாம் என்பதே தமிழரசுக் கட்சி கூறும் விளக்கம்.

 ஆனால்,தமிழரசுக் கட்சி கடந்த 13 ஆண்டுகளாக கூட்டமைப்புக்குள் இருந்த ஆயுதப்போராட்ட மரபில் வந்த கட்சிகளை அகற்றி வருகிறது என்பதே உண்மை.இந்த அடிப்படையில் கடைசிவரை நின்று பிடித்த பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

இங்கு வெளித்தள்ளப்பட்டிருப்பது பங்காளிக் கட்சிகள் மட்டுமல்ல ஒரு விதத்தில் மாவையுந்தான்.கட்சிக்குள் அவருடைய தலைமை ஸ்தானம் மேலும் பலவீனமடைந்திருக்கிறது என்று தெரிகிறது.கடந்த பல மாதங்களாக பங்காளிக்கட்சிகள் மற்றும் கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே விலகிய கட்சிகள் என்று ஐந்துக்கும் குறையாத கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்தன. இந்த ஒருங்கிணைப்புக்குள் மாவையும் அவ்வப்போது வந்து போனார்.

அதனால்தான் விக்னேஸ்வரன் மாவையின் தலைமையின் கீழ் ஐக்கியப்பட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று அறிக்கை விட்டிருந்தார்.அதே காலப்பகுதியில் பங்காளிக் கட்சிகள் இணைந்து கூட்டமைப்பின் தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதின.பரந்துபட்ட அளவில் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.ஆனால் தமிழரசு கட்சி அவ்வாறான பரந்த தளத்திலான ஐக்கியம் ஒன்றைக் கட்டியெழுப்பத் தயாரில்லை என்று தெரிகிறது. எனவே பங்காளிக் கட்சிகள் வெளித்தள்ளப்பட்டிருக்கின்றன.மாவை சேனாதிராஜா, இனி கட்சிக்கு வெளியே சேர்க்கைகளை வைத்துக் கொள்ள முடியாது.  

இது ஒரு நாள் நடக்கும் என்பது பங்காளி கட்சிகளுக்குத் தெரியும். சம்பந்தருக்குப் பின்னர்தான் அப்படி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சம்பந்தர் உடலாலும்,முடிவெடுக்கும் திறனாலும் தளரத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணிக்குள்,இரு தசாப்த காலங்களுக்குமேல் அவர் தலைமை தாங்கிய கூட்டு கலைந்து விட்டது. ஆனால் அதற்குரிய விளக்கத்தை ஒரு தலைவர் என்ற முறையில் அவர் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கவில்லை.இதுவும் தமிழ் அரசியலின் சீரழிவைக் காட்டுகிறது.

மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? | Sri Lankan Political Crisis Tamil Politicians

கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உடைந்து வந்த கூட்டமைப்பு இனி ஒரு கூட்டாக இருக்காது.அதே சமயம் விலகிச் சென்ற தரப்புக்கள் ஒரு புதிய கூட்டை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தன.அந்த ஒருங்கிணைப்புக்குள் ஜனநாயக போராளிகள் கட்சி,மணிவண்ணன், ஐங்கரநேசன்,ஆனந்தி சசிதரன், போன்றவர்களை உள்ளீர்த்து ஒரு மிகப்பெரிய கூட்டைக் கட்டியெழுப்பினால் அது தமிழரசுக் கட்சிக்கு தலையிடியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின்படி அப்படி ஒரு பெரும் கூட்டுக்கான வாய்ப்புக் குறைவு என்றே தெரிகிறது.

புதிய கூட்டின் சின்னம் எது என்பதிலும், அதன் செயலாளர் யார் என்பதிலும் விக்னேஸ்வரனோடு ஏனைய கட்சிகளால் உடன்பட முடியவில்லை.விக்னேஸ்வரன் தனது கட்சியின் சின்னமாகிய மான் சின்னத்தை விட்டுக் கொடுக்கத் தயார் இல்லை.அதேசமயம் புளட் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் செயலாளராக இருக்கும் கட்சியின் சின்னத்தை ஏனைய கட்சிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது.

அதை விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் ஏற்கவில்லை.மணிவண்ணன் விக்னேஸ்வரனின் கட்சியில் சேர்ந்து விட்டார்.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பில் மணிவண்ணனும் விக்னேஸ்வரனும் ஒரு தரப்பாகவும் ஏனைய கட்சிகள் மற்றொரு தரப்பாகவும் பிரிந்து நின்றதாகத் தெரிகிறது. ஒரு பொது முடிவை எட்டாமல் விக்னேஸ்வரன் இடையிலேயே எழுந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

சில சமயம் விக்னேஸ்வரன் ஒரு பொது முடிவுக்கு உடன்பட்டிருந்தாலும்கூட புதியகூட்டு தமிழரசுக் கட்சிக்கு சவாலாக மேலெழும் ஒரு புதிய வளர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தேவையான தலைமைப் பண்பு அவருக்குண்டா? என்ற கேள்வி உண்டு. ஏனென்றால் தன் சொந்தக் கட்சியையே பலப்படுத்தாத ஒரு தலைவர் அவர்.அவருடைய கட்சிக்குள் பெருமளவுக்கு அவர் மட்டும்தான் தெரிகிறார்.இப்பொழுது மணிவண்ணனையும் இணைத்திருக்கிறார்.

அவர் கட்சிக்குள் கலந்து பேசி முடிவுகளை எடுப்பதில்லை என்று கட்சி முக்கியஸ்தர்கள் குறைபடுகிறார்கள்.கட்சிக்குள் மட்டுமல்ல,கடந்த பல மாதங்களாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வரும் புதிய கூட்டுக்குள்ளும் அவர் முடிவுகளை கலந்து பேசி எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. மணிவண்ணனை கட்சிக்குள் இணைக்கும் முடிவும் அவ்வாறு கலந்து பேசி எடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் உண்டு.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் அவருக்கு ஒரு தனிச்சிறப்பான ஆணையை வழங்கினார்கள்.வீட்டுச் சின்னத்துக்கு வெளியே வந்தாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் ஒராணை அது. ஆனால் அந்த மக்கள் ஆணையை ஒரு பெரும் கட்சியாக நிறுவனமயப்படுத்த அவரால் முடியவில்லை.இவ்வாறு தன் சொந்தக் கட்சியையே கட்டியெழுப்ப முடியாத ஒருவர் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டதும், உள்ளதில் பலமானதுமாகிய, தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டை எப்படிக் கட்டியெழுப்புவார் என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

மேலும் புதிய கூட்டுக்குள் ஜனநாயக போராளிகள் கட்சியை இணைப்பதற்கும் விக்னேஸ்வரன் இணங்கவில்லை.அதற்கு அவர் கூறிய காரணம்,ஏற்கனவே கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளீர்க்கப்படவில்லை என்பதனால்,முதலில் ஏற்கனவே ஒருங்கிணைந்து செயல்பட்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்தபின்,ஜனநாயக போராளிகள் கட்சியையும் இணைப்பது தொடர்பாக சிந்திக்கலாம் என்று காரணம் கூறியுள்ளார்.

காரணம் எதுவாகவும் இருக்கலாம்.ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்புக்குப் பின் யார் யார் ஒன்றுபட்டிருக்கிறார்கள்? யார் யார் பிரிந்து நிற்கிறார்கள்? என்று பார்த்தால், முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் யாவும் ஒன்றாகிவிட்டன.இதில் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவரின் கட்சியும் அடங்கும்.அதே சமயம் ஆயுதப் போராட்ட மரபில் வராத அரசியல்வாதிகள் விலகி நிற்கிறார்கள்.

இவ்வாறாக தமிழ்த்தேசியப் பரப்பில் இப்பொழுது மொத்தம் நான்கு கூட்டுக்கள் அல்லது நான்கு சேர்க்கைகள் மேலெழுந்திருக்கின்றன.சிலசமயம் எதிர்காலத்தில் இவற்றுட் சில தங்களுக்கிடையே ஒரு புதிய ஒருங்கிணைப்புக்கு போக முடியும்.

மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? | Sri Lankan Political Crisis Tamil Politicians

ஆனால் இப்போதுள்ள களநிலவரத்தின்படி ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால்,தமிழ் வாக்குகள் கட்சிகளால் சிதறடிக்கப்படும் ஆபத்தே அதிகம் தெரிகிறது. முன்னைய தேர்தல்களின்போது ஒரு பழமொழி கூறப்படுவதுண்டு.“மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள்தான் இருக்கிறது” என்று.ஆனால் இனி அப்படிக்கூற முடியாது. கடந்த பொதுத் தேர்தல் கற்றுத்தந்த பாடம் அது. கடந்த பொதுத் தேர்தலின்போது கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தது. வீட்டு சின்னத்துக்கு வெளியே போனால் வெல்ல முடியாது என்ற மாயை உடைக்கப்பட்டது.ஆனால் அதேசமயம் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஒரு பலமான கூட்டாக உருத்திரளவில்லை.அதனால் கூட்டமைப்பு இழந்த ஆசனங்களில் மூன்றை அரச சார்பு கட்சிகள் வென்றன.அதாவது மீன் சட்டிக்கு வெளியே போய்விட்டது.

இனிமேலும் அதுதான் நிலைமை என்று தெரிகிறது.தமிழ் மக்கள் தேசமாகத் திரள்வதற்கு பதிலாக கட்சிகளாக சிதறப் போகிறார்களா?அதுவும் இப்படிப்பட்ட உடைவுகள் எப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றன?

அரசாங்கம் தமிழ்ப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கும் ஒரு காலகட்டம் இது. அதே சமயம் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் ஒரு திருப்பகரமான வெற்றியைப் பெற்றிருக்கும் காலகட்டமும் இது பேச்சுவார்த்தைக் காலங்களில் பேரத்தைக் குறையவிடக்கூடாது.பேரம் குறையக்கூடாது என்றால், தமிழ்மக்களைப் பொறுத்தவரை, தேசத் திரட்சியைப் பலப்படுத்த வேண்டும்.ஆனால் எந்த ஒரு தமிழ்க் கட்சியிடமும் அந்தத் தரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருபுறம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நீதிக்கான போராட்டத்தில் மேலும் ஒரு வெற்றியை பெற்றிருக்கும் அதே காலப்பகுதியில் தாயகத்தில் உள்ள கட்சிகளோ தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதற்குப் பதிலாக கட்சிகளாக,வாக்காளர்களாகச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.