கொழும்பில் போதைப்பொருள் விருந்து; சிக்கிய கோடீஸ்வர்களின் பிள்ளைகள்

0
333

கொழும்பு  கொம்பனி வீதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் 30வது மாடியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற போதைப்பொருள் விருந்தொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கு போதைப்பொருளுடன் யுவதியொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடம், ஒரு கிராம் கொக்கெய்ன், ஐந்து கிராம் குஷ் மற்றும் டான்சின் மாத்திரை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விருந்து பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் விருந்து நடைபெறுவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கோட்டை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விருந்தில் சுற்றிவளைக்கச் சென்றபோது, ​​பெரும்பாலான இளைஞர் யுவதிகள் குடிபோதையில் இருந்தனர்,

அவர்கள் கடமைகளைச் செய்யும் போது போதைப்பொருள் வைத்திருந்தவர்களை மட்டுமே அடையாளம் கண்டு கைது செய்தனர்.

இந்த உணவகத்தின் விருந்து நடத்தும் அறையை கடவத்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 5 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்தில் பங்கேற்பதற்காக 5000 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளதுடன், கோடீஸ்வர்களின் பிள்ளைகளே இதில் கலந்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விருந்தில் பாடுவதற்கு பிரபல இந்திய பாடகர் ஒருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக சோதனையை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு இந்த இடத்தில் மது பான போத்தல் ஒன்றின் குறைந்தபட்ச விலையாக 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதும், கூடுதலாக ஒரு கிராம் கொக்கைன் போதைப்பொருள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும், போதை மாத்திரை ஒன்று ஐந்தாயிரம் ரூபாய்ககு விற்கப்பட்டதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.