உலக சாதனை படைத்த இரண்டரை வயது இலங்கை சிறுமி! கின்னஸ் புத்தகத்தில் இடம்..

0
400

அம்பாறை மருதமுனையைச் சேர்ந்த ஸர்ஜுன் அக்மல்இ பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை வெறுமனே இரண்டு நிமிடத்தில் மிக வேகமாக கூறி உலக சாதனை புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

உலகின் 120 நாடுகளின் தலை நகரங்களை வெறும் இரண்டு நிமிடத்தில் கூறிய உலகின் முதலாவது சிறுமியாக தனது பெற்றோருக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துத்துள்ளார். உலக சாதனை புத்தக நிறுவனம் இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனை சிறுமியாக அறிவித்து இவருக்கான இலட்சினை,பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளது.

தனது இரண்டரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மின்ஹத் லமி மருதமுனை வரலாற்றில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த முதலாவது சாதனை சிறுமியாவார். இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய இச் சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றார்கள். இதன் தொடர்ச்சியாக அல்- மீஸான் பௌண்டசனின் மருதமுனை இணைப்பாளரும், தேசிய காங்கிரஸ் பிரமுகரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சமட் ஹமீடின் ஏற்பாட்டில் இச் சிறுமிக்கான கௌரவிப்பு நேற்றையதினம் (04) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அல்- மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் அல்- மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்காவின் கல்முனை இணைப்பாளர் எம்.என்.எம். அப்ராஸ் தேசிய காங்கிரஸ் மருதமுனை முக்கியஸ்தர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சாதனை சிறுமியை பாராட்டி கௌரவித்தனர்.

இந்த குழந்தையின் திறமையையும், அதீத நினைவாற்றலை பற்றி பாராட்டிய அதிதிகள் பிறந்த குழந்தைகளின் கைகளில் விளையாட்டு பொருட்களுக்குப் பதிலாக ஸ்மார்ட் போன்களை திணித்து மகிழும் பெற்றோர்களுக்கு மத்தியில் சகோதரர் ஸர்ஜுன் அக்மல் தனது குழந்தைக்கு நிறங்கள், பழங்கள்,இலக்கங்கள்,வடிவங்கள், எழுத்துக்கள் மற்றும் பொது அறிவுத் தகவல்களையும், அது தொடர்பான எளிய செயல்முறைகளையும் கற்றுக் கொடுத்ததுடன் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டு இன்று எனது குழந்தையை ஒரு சாதனை குழந்தையாக ஆக்கியுள்ளார்.

இச்சிறுமி தனது பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செவிமடுத்து மனனம் செய்வதுடன், ஞாபகத்திலும் வைத்துக்கொள்கிறார். இவர் எதாவது ஒரு பொருளையோ ஒரு இடத்தையோ அவதானித்தவுடன் அது பற்றி அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டக்கூடியவர். அதனை அறிந்து கொண்டு சில நாட்களுக்கு பின்னர் அப்பொருள் பற்றியோ அவ்விடம் பற்றியோ தானாகவே சொல்லக்கூடிய திறமை அவரிடம் உண்டு.சுற்று சூழலில் உள்ள பொருட்கள், இவருடைய புலங்களுக்கு தென்படுகின்ற எதுவாக இருந்தாலும் அது பற்றி கேட்டறிந்து கொள்வார் என்பதை அறிந்து சந்தோஷப்பட்டோம்.

இவர் 400க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கில கருத்தினை தெளிவாக சொல்லக்கூடிய திறமையும், தமிழ் அகரவரிசையிலுள்ள 247 எழுத்துக்களையும் மிக வேகமாக சொல்லக்கூடியவர். அத்துடன் மாதங்கள், வாரங்கள், நிறங்கள், பழங்கள், வடிவங்கள், உடல் உறுப்புகளின் பகுதிகள், பறவைகள், இலக்கங்கள், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் அதற்கான சொற்களையும் ஒழுங்கு வரிசையாகவும், வரிசை இல்லாமலும் மிக வேகமாக சொல்லக்கூடிய பல திறமைகளையும் இவர் தன்னகத்தே கொண்டுள்ளார்.

கின்னஸ் சாதனை படைத்த அம்பாறை சிறுமி! | Ampara Girl With Guinness Record

இவை தவிர பொது அறிவு உள்ளிட்ட விடயங்கள் 100 இஸ்லாமிய கேள்விகளுக்கான பதில்கள் அத்தோடு நின்றுவிடாமல் தற்போது அல்குர்ஆனின் பல சூறாக்களையும் மனனம் செய்து கொண்டு வருகின்றார். சென்ற வருடம் AMR talk அமையத்தின் மூலம் அபார ஆற்றல் கொண்ட இரண்டு வயது குழந்தை என தேசிய ரீதியில் தெரிவு செய்யப்ப ட்டிருந்தார்.

அத்துடன் PSC talk வலையமைப்பு தேசிய ரீதியில் நாடாத்திய சிறுவர்களுக்கான talent show நிகழ்சியில் பங்குபற்றி 450 போட்டியாளர்களுக்குள் வெற்றி பெற்று அவ்வமைப்பிடம் இருந்து பண்ணப்பரிசும், சான்றிதழும் பெற்றுக் கொண்டார். இக்குழந்தை இரண்டரை வயதில் நிகழ்த்திய இச் சாதனையானது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இச்சிறுமி எதிர்காலத்தில் கல்வி துறையிலும், ஏனைய துறைகளிலும் மென் மேலும் பல சாதனைகளைப் பெற்று எதிர் காலத்தில் நாட்டிற்கும் தேசத்திற்கும் பெருமையை தேடித் தரக்கூடிய ஒருவராக மிளிர வேண்டும் என்று சகலரும் வாழ்த்தி பாராட்டுகின்றனர்