30 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் விடுதலை!

0
61

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் விடுதலை காற்றை சுவாசித்தும், கணவனுடன் பேசக்கூட முடியாமல் நளினி முருகன் அழைத்துச் செல்லப்பட்ட பொலிஸ் வாகனத்தின் பின்னாலேயே ஓடிய காட்சிகள் பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் இன்று மாலை முடிந்து அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான இலங்கை தமிழர்கள்! | Sri Lankan Tamils Freed After 30 Years

தொடர்ந்து பத்து மாதமாக நளினி பரோலில் இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் இன்று சிறைச்சாலைக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பரோலில் இருந்த நளினி பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்பு விடுதலை நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

அப்போது சாந்தன், முருகன் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நளினியும் முருகனும் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்கள் மீண்டும் சந்திக்க முடியாமல் போனது.

காரணம் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கை தமிழர்கள் என்பதால் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான இலங்கை தமிழர்கள்! | Sri Lankan Tamils Freed After 30 Years

பல ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர காற்றை சுவாசித்தாலும் முருகனும் நளினியும் சந்திக்க முடியாமல் போனது. முருகனை பலத்த பாதுகாப்புடன் பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது நளினி பொலிஸ் வாகனத்தில் ஜன்னலை பிடித்துக் கொண்டே கணவரை பார்த்து கண்கலங்கிய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

சாந்தன் இலங்கைக்கு திரும்ப விரும்புவதாக கூறியுள்ள நிலையில், இலங்கை தமிழர்களான முருகன் உள்ளிட்டோர் நிலை குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.