10 வருடங்களாக தாயை தேடும் 44 வயது சுவிஸ் பெண்!

0
465

ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் பெண் ஒருவர் தனது தாயைத் தேடி இந்தியாவில் அலையும் விஷயமும் இதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீனா முல்லர். இவருக்கு தற்போது 44 வயதாகிறது. இதனிடையே, கடந்த 1978 ஆம் ஆண்டு, மும்பையில் பிறந்த பீனாவை அனாதை இல்லம் ஒன்றில் அவரது தாய் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கான காரணம் பற்றி அனாதை இல்லத்தில் கேட்ட போது குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் அங்கே விட்டு செல்வதாகவும் பீனாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், குழந்தையாக இருந்த பீனாவை அவரது தாயார் பார்க்க வரவேயில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அந்த ஆசிரமத்தில் உள்ளவர்கள் அவருக்கு பீனா என பெயரிட்டு வளர்த்தும் வந்துள்ளனர். தொடர்ந்து, பீனா முல்லருக்கு ஒரு வயது நெருங்கும் வேளையில், ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த குழந்தையில்லா தம்பதியினர் தத்தெடுத்து தங்களின் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதன் பின்னர், பீனாவை சிறப்பாக வளர்த்து வந்த தம்பதி அவரை நல்ல முறையில் பார்த்துக் கொண்டனர். தனது பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை தனது பிறப்பு குறித்து எதுவும் தெரியாமல் பீனா வளர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் தான் தனது பிறப்பு குறித்து பீனாவுக்கும் தெரிய வந்துள்ளது.

woman search of her biological mother in mumbai

இது பற்றி அவரும் வளர்ப்பு பெற்றோரிடம் கேட்க, தான் இந்தியாவின் மும்பையில் பிறந்த ஒரு குழந்தை என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, தனது நிஜ தாயை பார்க்க வேண்டும் என்றும் ஏங்கி உள்ளார் பீனா. இதற்கு மத்தியில், பீனாவுக்கு திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

தொடர்ந்து, கடந்த 2012 ஆம் ஆண்டு தனது தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய பீனா மும்பைக்கு வந்துள்ளார். தனது தாய் பற்றி தத்து கொடுக்கப்பட்ட ஆசிரமத்தில் விசாரித்த போது அவரது தாய் பெயர் உள்ளிட்ட ஒரு சில விவரங்களை மட்டும் கொடுத்துள்ளனர். இந்த தகவல்களை வைத்துக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் தனது தாயாரை தேடி வருகிறார் பீனா.

ஆனால், இதுவரை தாயார் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி பேசும் பீனா, கடந்த 10 வருடங்களாக மும்பை வருவதும் போவதுமாக இருப்பதாகவும் இங்கே தங்கி இருந்து தனது தாயை தேடுவதுமாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு முறையாவது தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இங்குள்ள போலீஸ் மற்றும் வழக்கறிஞர்கள் உதவியுடன் தனது தாயை பீனா தொடர்ந்து தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.