கிளிநொச்சியில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள்!

0
466

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்தின் 2000 நாளை முன்னிட்டு நேற்றையதினம் (12-08-2022) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய கவனயீர்ப்பு பேரணியில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், சமயத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெற்றுவந்த கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்கள் ஜோசெப் ஸ்டாலின் மற்றும் சந்தியா எக்லினாகொடா ஆகியோர் உட்பட காலிமுகத்திடலில் இருந்து 28 பேர் இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்து தமது ஆதரவை தெரிவித்தனர்.

இதேவேளை கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்திலிருந்து வருகை தந்தவர்களில் ஒருவரான ராஜ்குமார் ரஜீவ்காந் குறித்த போராட்டம் தொடர்பில் தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தும் நீதிக்கான போராட்டம் 2000ஆவது நாட்களைத் தொட்டு தொடர்ந்து செல்கிறது.

மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை சரியான முறையில் இதற்கான பொறுப்பு கூறல்களையும் அதற்கான தண்டணைகளையும் வலியுறுத்தி இன்றும் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

ஜோசெப் ஸ்டாலின் மற்றும் சந்தியா எக்லினாகொடா ஆகியோர் உட்பட இதில் காலிமுகத்திடலில் இருந்து 28 பேர் கிளிநொச்சியில் கலந்து கொண்டார்கள்.

போராட்ட ஏற்பாட்டாளர்கள் எமது வருகையை பெரும் பலமாக ஏற்றுக்கொண்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஶ்ரீதரன் மற்றும் கஜேந்திரனும் இதில் கலந்து கொண்டார்கள்.

எம்மை பலர் இங்கு ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஆர்ப்பாட்ட முடிவில் போராட்ட ஏற்பாட்டுக் குழுவுடன் நீண்ட நேர உரையாடல் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கலந்து கொண்ட சிங்கள நண்பர்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இராணுவம் வெளியேறு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், போர்க்குற்றவாளிக்கு தண்டை வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பினர்.

ஊடகங்களில் சிங்கள மொழியில் இவர்களுக்கான முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது என தெரிவித்தார்.