இந்தோனேஷியாவில் 117 பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டு தகனம்

0
151

ஜகர்த்தா இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஹிந்துக்கள் பாரம்பரிய வழக்கப்படி இறந்த 100க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக் கூடுகளை ஒரே சமயத்தில் தகனம் செய்தனர்.

இங்கு உள்ள ஹிந்துக்கள் இறந்தவர்களின் உடல்களை முதலில் புதைத்து சில காலத்திற்குப் பின் சவக்குழியில் இருந்து எலும்புகளை எடுத்து மொத்தமாக தகனம் செய்து வருகின்றனர். இந்த சடங்கு முடிந்த பின் இறந்தவர்களின் ஆத்மா விடுதலை அடைந்து புது வாழ்க்கையை துவக்குவதாக மக்கள் நம்பி வருகின்றனர்.

தனித்து தகனம் செய்வதை விட மொத்தமாக தகனம் செய்வது செலவு குறைவாகவும் உள்ளதனால் இத்தகைய வழிமுறையை மக்கள் பின்பற்றுகின்றனர்.

இதன்படி, பாலியின் படங்பாய் கிராமத்தில் இறந்த 117 பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டு தகனம் செய்யும் சடங்கு நடந்தது. 20 அடி உயர தேரில் எலும்புகள் அடங்கிய பெட்டிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

இறந்தவர்களின் படங்களை உறவினர்கள் அந்த தேரில் வைத்து அஞ்சலி செலுத்தி ஏராளமானோர் பங்கேற்ற இந்த ஊர்வலத்தின் இறுதியில் எருது வடிவிலான பிரமாண்ட மூங்கில் பொம்மையில் எலும்புகள் வைக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன.

அதன் பின் உறவினர்கள் சாம்பலை எடுத்து கடலில் கரைத்தனர். படங்பாய் கிராமத்தில் 117 பேரின் எலும்புக் கூடுகள் தகனம் செய்யப்பட்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.