யாழ் நபரொருவரின் மனம் உருக்கிய ட்விட்டர் பதிவு!

0
469

எரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாய்த் தகறாறுகள், கை கலப்புகள் இடம்பெற்று வருகிற நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது இன்று கல்வியங்காட்டுச் சந்தைக்கு செல்லவேண்டி இருந்தது. பெட்ரோல் வரிசை சந்தையை தாண்டி ‘பிரயாணித்தது மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தார்கள்.

ஒரு பக்கம் மக்கள் வெறும் பைகளுடன் சந்தையை நோக்கி விரைய இன்னும் சிலர் ஓரிரு அரைவாசி நிரம்பிய பைகளுடன் வெளியேறினர்.

ஓர் அழகான காட்சியாக இருந்தது. ஆறுதலாக அனைத்தையும் அவதானித்தேன்! ரசித்தேன்! எனது ஊர்! எனது யாழ்ப்பாணம் என்று மனநிறைவுடன் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென சாதாரண தர தூஷண வார்த்தைகள் அமைதியைக் குழப்பியது. மூன்று நான்கு குரல்களில் உயர் தர தூஷணங்கள் பிரயோகிக்கப்பட்டது.

இரு ராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தில் மாட்டிக்கொண்ட மக்களை போல் சந்தைக்கருகில் இருந்தவர்கள் போர்க்களத்தில் இருந்து இருபக்கமாக விரைந்தார்கள்.

கால் சட்டைக்குள் சட்டையை ஒழுங்காக இன் செய்திருந்த ஒரு 60 வயதுடைய டீசென்ட் ஜென்டில்மேன் என அழைக்கப்படக்கூடிவர். ஓர் அலுவலகத்தில் கடமையாற்றும் 50 வயதுடைய பெண் மற்றும் ஒரு கையில் 10 வயது சிறுவனையும் இன்னொரு கையில் ஒரு மரக்கறி பையையும் பிடித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் நான் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார்கள். முகங்களில் சங்கடமும் அவமானமும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது!

நான் பெருமை கொண்ட யாழ்ப்பாணம் இதுவா?

நாகரியத்தை உலக மக்களுக்கு கற்றுக்கொடுத்த நாகரியம் நாம் என்று கூறும் நாம் அநாகரிக சொற்களை பொது இடங்களில் அதுவும் உரத்த குரல்களில் 10 வயது தம்பிகளும் 20 வயது தங்கைகளும் 40 வயது அக்காக்களும் 60 வயதுடைய பெற்றோர்களும் இருக்கும் இடங்களில் பிரயோகிக்கலாமா? நாங்கள் ஓர் நாகரியமான சமுதாயம் தானா என்று இது சிந்திக்க வைக்கிறது.

அவ்வாறு நடந்துகொள்ளபவர்களை மட்டும் நாம் பிழை கூறி விட முடியாது! இந்த சமுதாயத்தை சேர்ந்த நாங்களும் குற்றவாளிகளே! ஒரு ஆசிரியராக, ஒரு தகப்பனாக, ஒரு உறவினராக, ஒரு நண்பனாக, ஒரு அயலவராக, ஒரு பத்திரிகை ஆசிரியராக, ஒரு மத குருவாக நாம் இவர்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்த முடியாமல் போயுள்ளது.

அதற்காக தூஷணம் பொழிந்து கொண்டிருக்கும் வாட்டசாட்டமான வலிமையான ஒருவரை எதிர்கொண்டு ‘தம்பி நீங்கள் செய்வது தவறு!’ என்று சொல்லி விடாதீர்கள்! யாழ் போதனா வைத்தியசாலையில் போதிய அளவில் கட்டில்கள் அவரச சிகிச்சை பிரிவில் இல்லை! ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ எனும் பழமொழிக்கிணங்க சிறிவயதில் நாம் அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவேண்டும்.

கணிதமும் விஞ்ஞானமும் முக்கியம். ஆனால் அதை விட முக்கியமானது ஒழுக்கமும் இறை ஞானமும் என குறிப்பிட்டுள்ளார். எமது தலை முறை அடுத்து வரும் தலைமுறையை நல்வழிப்படுத்தாததால் தான் கார் ஓடிய நாம் இப்பொழுது சைக்கிளில் செல்ல வேண்டியுள்ளது. இப்போது இருக்கும் தலைமுறையும் இதே தவறை விட்டால் நாம் காட்டு வாசிகளாகி விடுவோம் என்று கூறியுள்ளார்.