யாழில் எரிபொருள் நிலைய மோசடியை தட்டி கேட்ட இளைஞன்!

0
261

யாழ். அச்சுவேலி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற எரிபொருள் பதுக்கலை வீடியோ ஆதாரத்தின் மூலம் வெளியிட்ட இளைஞனை பழி வாங்கும் நடவடிக்கையை குறித்த எரிபொருள் நிலையத்தினர் மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு எரிபொருள் இருந்தும் அதனை வழங்காது பதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் எரிபொருள் நிலையத்துக்கு வருகை தந்த கர்ப்பிணி பொண்ணொருவர் வாகன இலக்கமும் QR குறியீடும் இருந்தும் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படவில்லை.

இதனை அவதானித்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த முகாமையாளரிடமும் பொலிஸாரிடமும் குறித்த கர்ப்பிணிப் பெண்ணின் வாகன இலக்கம் மற்றும் QR குறியீடு என்பன சரியாக இருக்கின்ற நிலையில் ஏன் எரிபொருள் வழங்க முடியாது என கேள்வி எழுப்பினார்.

அவர் இவ்வாறு செயல்படும்போது தனது கையடக்க தொலைபேசியில் வீடியோவை பதிவு செய்து நியாயம் கேட்டிருந்தார். பின்னர் முகாமையாளர் குறித்த பெண்ணின் வாகனத்திற்கு எரிபொருள் வழங்கியதுடன் அங்கிருந்த ஏனையவர்களுக்கும் எரிபொருள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த செயற்பாட்டை மேற்கொண்ட இளைஞனை பழிவாங்கும் முகமாக எரிபொருள் நிலையத்தில் கடைமையாற்றும் வேளையில் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் எரிபொருள் நிலையத்தில் கடமையில் உள்ள போது எரிபொருளை மக்களுக்கு வழங்காது பதுக்கிய எரிபொருள் நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் தட்டி கேட்ட இளைஞன் மீது நடவடிக்கை எடுப்பது எவ்வாறு என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.