அமைச்சரவையில் எந்த ராஜபக்சவும் வேண்டாம்; சந்திரிகா ஆதங்கம்!

0
536

புதிதாக அமையவுள்ள சர்வகட்சி அரசின் அமைச்சரவையில் ராஜபக்சக்கள் எவரும் அங்கம் வகிக்கக்கூடாது. அவர்களுடைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது.

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியவாறு சர்வகட்சி அரசு அமைவதே நாட்டுக்கு நல்லது.’ இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இருவரையும் மக்கள் விரும்பவில்லை.

இதனால்தான் மக்கள் நாடெங்கும் போராட்டம் நடத்தினார்கள். புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்துள்ளது. புதிய பிரதமரை ஜனாதிபதி தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தெரிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், இடைக்கால சர்வகட்சி அரசு அவசியம். தனியொரு கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தி ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது. அனைவரது ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் மிகவும் அவசியம். ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு என்ற பேதம் இல்லாமல் சர்வகட்சி அரசு அமையவேண்டும்.

அதேவேளை, புதிய பிரதமர் தொடர்பில் சர்வகட்சி அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.