பாகிஸ்தான் 13 வயது சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய இந்திய மருத்துவர்!

0
190

பாகிஸ்தானைச் சேர்ந்த 13 வயது அஃப்ஷீன் குல் என்ற பெண்ணுக்கு உடலில் வித்தியாசமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அவரது கழுத்து ஒரு பக்கம் சாய்ந்து செங்கோணமாக இருக்கும். 10 மாதக் குழந்தையாக இருந்தபோது அக்காவின் கையிலிருந்து தவறி விழுந்ததில் அவரது கழுத்து வளைந்துவிட்டது. அந்நிலையில் இருந்து அஃப்ஷீனின் வாழ்க்கை தலைகீழானது.

அவரைப் பார்வையிட்ட மருத்துவர் சில மருந்துகளையும் கழுத்துக்கு வார் ஒன்றையும் தந்தார். இருப்பினும், அது வலியை மோசமடையச் செய்தது. கூடுதல் மருந்துகளை வாங்கவும் வசதி இல்லை. அஃப்ஷீனுக்கு ஏற்கெனவே Cerebral Palsy எனும் பெருமூளை வாதம் இருந்தது என்று BBC செய்தி நிறுவனம் சொன்னது.

அவர் 6 வயதில்தான் நடக்கத் தொடங்கினார். 8 வயதில்தான் பேச ஆரம்பித்தார். அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. நண்பர்களும் இல்லை. அஃப்ஷீன் 12 வயதுவரை வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. வலியைத் தாங்கியவாறு 2017-ஆம் ஆண்டு முதல் அவரது கதை உலகளவில் பல்வேறு ஊடகங்களில் பகிரப்பட்டது.

2019-ஆம் ஆண்டில் இந்தியாவின் டில்லியைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணன், அஃப்ஷீனுக்கு உதவ முன்வந்தார். தண்டுவடம் திரும்பிக்கொண்டதால் உண்டான கழுத்துக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு அஃப்ஷீனுக்குச் சில சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் தேவைப்பட்டன. அறுவைச் சிகிச்சையின்போது அவரது இதயமோ நுரையீரலோ செயலிழக்கும் அபாயம் இருந்ததாய் மருத்துவர் குறிப்பிட்டதாக அஃப்ஷீனின் குடும்பத்தார் கூறினர்.

இவ்வாண்டு பிப்ரவரியில் அஃப்ஷீனின் கழுத்துக்கு முக்கிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 6 மணி நேர அறுவைச் சிகிச்சையில் அவரது மண்டை ஓடு தண்டு வடத்துடன் இணைக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது. அஃப்ஷீன் தற்போது சொந்தமாக நடக்கிறார். பேசுகிறார். சாப்பிடுகிறார். நேரான கழுத்துடன் நிமிர்ந்து நடக்கிறாள்.

சிகிச்சை செய்திருக்காவிட்டால் அஃப்ஷீன் வெகுநாள் உயிருடன் இருந்திருக்கமுடியாது என்று டாக்டர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அஃப்ஷீனின் முகத்தில் ஏற்பட்டுள்ள புன்னகையைக் கண்டு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஆனந்தமடைவதாகக் அவரின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.