கடலோர பாதுகாப்பு படைக்கு மற்றுமொரு கப்பல் இணைத்துக் கொள்ளப்பட்டது

0
153

இலங்கை கடலோர பாதுகாப்புப்படைக்கென ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் (OPV)  ஜயசாகர என்ற பெயரில் இன்று (ஜூலை 23) உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

துறைமுக நகரான திருகோணமலையில் இன்று காலை நடைபெற்ற அதிகாரமளிக்கும் இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிகாரியாக கலந்து சிறப்பித்தார்.

 இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின்  பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க அங்கு வருகை தந்த பிரதம அதிதியான ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை வரவேற்றார்.

  • அதிகாரமளிக்கும் நிகழ்வியல் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிகாரியாக பங்கேற்பு

பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு கடலோர பாதுகாப்பு படையினரால் விஷேட மரியாதை அணிவகுப்பு  வழங்கப்பட்டது.

 பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

பாதுகாப்புச் செயலாளர்  அடையாளப்பூர்வமாக அதிகாரப்பத்திரத்தை கப்பலின் கட்டளை அதிகாரிக்கு கையளித்ததனைத் தொடர்ந்து  அதனைப் பெற்றுக்கொண்ட  கப்பலின் கட்டளை அதிகாரி  சம்பிரதாய மரபுகளுக்கமைய அதனை வாசித்தார்.

ஜெனரல் குணரத்ன,  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கரையோரப் பாதுகாப்புப்படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க ஆகியோருடன் கப்பலுக்கு சென்று  கப்பலின் சின்னம் மற்றும் பெயர்ப் பலகையை மகா சங்கத்தினர்  மற்றும் பிர மத பிரமுகர்களது ஆசீர்வாதத்திற்கு மத்தியில் திறந்து வைத்தார்.

அதன் பின் கப்பலை பார்வையிட்ட  ஜெனரல் கமல் குணரத்னவுக்கு, கடலோர பாதுகாப்பு படையின் அதிகாரினால்  கப்பலின்  வசதிகள் மற்றும் செயற்பாட்டுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விஷேட பிரமுகர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் ரியர் அட்மிரல் ஏக்கநாயக்க,  பாதுகாப்புச் செயலாளருக்கு   நினைவுச் சின்னமொன்றை வழங்கி கௌரவித்தார். அதேபோன்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன அவர்களும் கரையோரப் பாதுகாப்புப்படையின் பணிப்பாளர் நாயகத்துக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.

39.8மீ நீளத்தையும் 07மீ அகலத்தையும் கொண்ட இந்த கப்பல் 313 தொன் எடையுடையதாகும். இந்த கப்பல் 10 அதிகாரிகள் உட்பட 78 பணியாளர்களுடன் 7 நொட் சஞ்சரிப்பு வேகத்தில் 3200 கடல் மைல்கள் பயணிக்ககூடியது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது முக்கிய பங்காற்றிய இக்கப்பல் இலங்கை கடற்படையினால் இவ்வாண்டு ஜனவரியில் (03) கடலோர பாதுகாப்புப்படையிடம்  கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மரபுகளுக்கமைய, கப்பல்கள் முப்படைகளின் தளபதி நியமிக்கும் அதிகாரி ஒருவரினால் அதிகாரம் பெரும் போது கடற்படை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். 

 கடலோரக் பாதுகாப்பு படையின் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்ட பின்னர் இந்தக் கப்பல் கடலோரக் பாதுகாப்பு படையில் இணைந்து புதிய பரிணாமத்தில் நாட்டிக்கான அதன் சேவையை தொடரும்.

இன்றைய நிகழ்விற்கு வருகை தருவதற்கு முன், ஜெனரல் கமல் குணரத்ன, கடற்படைத் தளபதி அவர்களுடன் கடற்படைத் தளத்திலுள்ள உயிர் நீத்த கடற்படை வீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.

மகா சங்கத்தினர் உட்பட சமயப் பெருமக்கள், கிழக்கு கடற்படைத் தளபதி உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் பலரும்  இந்நிகழ்வில் கலந்து   கொண்டனர்.