இன்று முதல் திருத்தப்பட்ட ரயில் கட்டணம் அமுல்

0
148

இன்று முதல் திருத்தப்பட்ட ரயில் கட்டணம் அமுலாவதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சில பிரச்சினைகள் காரணமாக ரயில் கட்டண திருத்தத்தை அமுலாக்க முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 10 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்புக்கான ஆகக்குறைந்த கட்டணம் 50 ரூபாவாகவும், முதலாம் வகுப்புக்கான ஆகக்குறைந்த கட்டணம் 100 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்றாம் வகுப்புக்காக முதல் 10 கிலோமீற்றர்களுக்குள் ஒரு கிலோமீற்றருக்கு 2 ரூபா 60 சதமும், இரண்டாம் வகுப்புக்காக 5 ரூபா 20 சதமும், முதலாம் வகுப்புக்காக 10 ரூபா 40 சதமும் என ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டண உயர்வை இன்று முதல் தொடருந்து நிலையங்களில் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், போக்குவரத்து அமைச்சு தீர்மானித்ததன் அடிப்படையில் இன்று முதல் ரயில் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டண அதிகரிப்பை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அமுலாக்க தயார் என அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

Sumedha Somaratne

இந்த கட்டண உயர்வில் உள்ள குறைபாடுகள் இதுவரையில் நிவர்த்தி செய்யப்படவில்லை.

எனவே, இன்றைய தினம் முதல் குறித்த காலப்பகுதி வரையில் பழைய கட்டணத்தின் அடிப்படையில் ரயில் பயணச் சீட்டுக்களை விநியோகிக்குமாறு தமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைபோன்று சேவையில் ஈடுபடும் என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். 

Kingsley Ranavaka