ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சியை மதிக்கவேண்டும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

0
66

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் சட்டத்தின் ஆட்சியும் மக்களின் உரிமையும் மதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலக பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு வன்முறைகளை பயன்படுத்தியமையை கடுமையாகவும் தயக்கம் இன்றியும் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான படையினரும் பொலிஸாரும் காலிமுகத்திடல் வீதிக்கான வழிகளை தடுத்தனர் பொதுமக்கள் நுழைவதை தடுத்தனர் என்பது வெளிப்படையான விடயம்,அந்த பகுதிக்குள் நுழைய முற்பட்ட சட்டத்தரணிகளையும் அவர்கள் தடுத்து நிறுத்தினர், தங்கள் தொழில்சார் அடிப்படையில் தலையிட முயன்ற இரு சட்டத்தரணிகள் படையினரால் தாக்கப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பு படையினர் தாக்குவதையும் வீடியோ காண்பித்துள்ளது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தரணி மற்றும் பத்திரிகையாளர் ஒருவரை படையினர் கைதுசெய்துள்ளனர், புதிய ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் முதல்நாளன்றே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்காக படையினரை பயன்படுத்தியுள்ளமை கடுமையாக கண்டிக்கத்தக்கது,நாட்டின் அரசியல் பொருளாதார ஸ்திரதன்மைக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவருக்கும் எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் அவசியம் உத்தரவை வழங்கிய அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.