பிளவுபட்டது போதும் நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்

0
167

பிளவுபட்டது போதும், ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோமென புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து கட்சிகளுக்கும் நேற்று அழைப்பு விடுத்தார்.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளாரென பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவர் இந்த அழைப்பை விடுத்தார். தம்முடன் போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் டளஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கும் இத்தகைய அழைப்பை விடுத்த புதிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சீ.வி. விக்கினேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் சபையில் இந்த அழைப்பை விடுத்தார்.

அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தப் போவதாக சபையில் தெரிவித்த புதிய ஜனாதிபதி, உடனடியாகவே அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதியாக நேற்றைய தினம் 134 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி தெரிவில் வெற்றியடைந்த ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சபாநாயகரே, நீங்களும், நானும் 1973 ஆம் ஆண்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்தோம். அந்த வகையில் உங்கள் முன்னிலையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை பெருமையாகக் கருதுகிறேன்.

45 வருடகாலம் பாராளுமன்ற அரசியலில் ஈடுப்பட்டுள்ள எனது வாழ்க்கை பாராளுமன்றத்துடனேயே உள்ளது. பாராளுமன்றத்தினூடாக எனக்கு இந்த கௌரவத்தை வழங்கியுள்ளமைக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1993ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கொலை செய்யப்பட்டதையடுத்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய பாராளுமன்றம் இவ்வாறு கூடியது.

அப்போது டி.பி.விஜேதுங்க போட்டியில்லாமல் தெரிவு செய்யப்பட்டார்.

அன்று ஜனாதிபதி தெரிவுக்காக கலந்து கொண்டவர்களில் 15 பேர் இன்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியை தெரிவு செய்வது வாக்கெடுப்புடன் முதன் முறையாக இடம்பெற்றுள்ளது.

பல்வேறுப்பட்ட பேச்சுவார்த்தை ஊடாக பாராளுமன்ற ஜனநாயகத்துக்கமைய எவ்வித முரண்பாடுகளுமின்றி ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கும், வாக்களிப்பில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் புதிதாகக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்பார்க்கின்றனர். பூகோள நெருக்கடிகளுக்கு சிக்காமல் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. பழைய அரசியலை மக்கள் எதிர்பார்க்கவில்லை. புதிய அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்க்கிறனர். என்னுடன் ஜனாதிபதிக்கான தெரிவில் போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும, அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒன்றிணைந்து புதிய வேலத்திட்டத்துடன் செயற்படுவோம். சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க, ஆகியோரும் எம்முடன் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

அதேபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மற்றும் கஜேந்திரகுமார்.பொன்னம்பலம்,சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

பிளவுப்பட்டது போதும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் இன்று முதலே அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன்.

அதேவேளை, பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் புதிய ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு நான் சபாநாயகரைக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.