சுவிஸில் குடிநீரை வீணாக்கினால் 10000 பிராங்க் அபராதம்!

0
594

சுவிட்சர்லாந்தின் நகரமொன்றில் குழாய் நீரை பருகுதல் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தினால் பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தின் தென் பகுதியில் அமைந்துள்ள மென்ட்ரிசியோ என்னும் மாநகரசபையின் நிர்வாகம் இவ்வாறு அபராதம் குறித்து அறிவித்துள்ளது.

குழாயிலிருந்து கிடைக்கப் பெறும் நீரை வீட்டுத் தேவைகளுக்கு அன்றி வேறும் தேவைகளுக்கு பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான வெப்பநிலையுடனான காலநிலையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. நீரை சேமிப்பது மிகவும் அவசியமானது என மாநகரசபை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளின் ஊடாக விளம்பரமும் இது குறித்து செய்யப்பட்டுள்ளது.

நகரில் வசிப்பவர்கள் குழாய் நீரை பூந்தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவோ வாகனங்களை கழுவவோ அல்லது நீச்சல் தடாகங்களை நிரப்பிக் கொள்ளவோ பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குழாய் நீரை பருகுதல், சமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பால் பயன்படுத்தினால் பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகள் வரையில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவி வரும் வறட்சி மற்றும் வெப்பநிலையுடனான காலநிலையினால் நீர் நிலைகள் வற்றிப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அல்பின் மலைகளினால் ஆன சுவிட்சர்லாந்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது அரிதானது என சுற்றாடல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, எதிர்வரும் வாரமும் சுவிட்சர்லாந்தில் வறட்சியான காலநிலை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.