மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் அரசியல் தரப்பினர் செயற்பட வேண்டும் – முப்படை தளபதிகள் வேண்டுக்கோள்

0
124

அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு, எதிர்வரும் 20ஆம் திகதி வரை பொறுமையாக செயற்படுமாறு அவர்களிடம் வலியுறுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாக அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் அரசியல் தரப்பினர் செயற்பட வேண்டும் என முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அரசியல் கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தினர்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராய சபாநாயகர் தலைமையில் நேற்று மாலை விசேட கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது.

கட்சி தலைவர் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் கூடியிருந்த கட்சி தலைவர்கள் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினர்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா எடுத்துரைத்தார். தற்போதைய நிலைமையை பாதுகாப்பு தரப்பினரால் கட்டுப்படுத்த முடியும் பாதுகாப்பு தரப்பினர் குறைந்தப்பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர் என பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு,எதிர்வரும் 20ஆம் திகதி பொறுமையுடன் செயற்படுமாறு குறிப்பிடுங்கள்.

பாராளுமன்றத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தின் ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை நாட்டு மக்களுக்கு வழங்குங்கள் என முப்படைகளின் தளபதிகள் அரசியல் கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தினர்.

எமக்கு அவ்வாறு செய்ய முடியாது. பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும். அவரை பதவியில் வைத்துக்கொண்டு எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என கட்சி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல் கடிதத்தை உத்தியோகப்பூர்வமாக சபாநாயனருக்க வழங்குவதற்கு முன்னர் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கட்சி தலைவர்களான மைத்திரிபால சிறிசேன,அனுர குமார திஸாநாயக்க,உதய கம்மன்பில மற்றும் அதுரலியே ரத்ன தேரர் ஆகியோர் கூட்டம் நிறைவடைவதற்கு முன்னரே கூட்டத்திலிருந்து வெளியேறினர்.