போதைவஸ்து பாவனையாளர்களின் மறைவிடமாக மீராநகர் கிராமோதய சுகாதார நிலையக் கட்டடம்!

0
170

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட மீராநகர் பகுதியில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கிராமோதய சுகாதார நிலைய கட்டடத்தை போதைப்பாவனைக்கு அடிமையான இளைஞர்கள் தற்போது பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இக்கட்டடமானது அக்கரைப்பற்று மீராநகர் பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு 2006.08.31ஆம் திகதி அன்றைய சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இப்பகுதி மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கப்பட்டது.

இக்கட்டடம் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் கிராமிய சுகாதார நிலையமாக இருந்த வேளையில் கர்ப்பிணித் தாய்மார்களையும் குழந்தைகளையும் எடை பார்த்து, திரிபோஷா வழங்கும் இடமாகவும், கர்ப்பிணி தாய்மார்களின் கிளினிக் மத்திய நிலையமாகவும் சுகாதாரப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பின்னரான காலப்பகுதியில் இங்கு வழங்கப்பட்ட சேவைகள் வேறு இடங்களுக்கு மாற்றமடைந்தைத் தொடர்ந்து, இக்கட்டடத்தின் அறைகளில் மின்விசிறிகள், மின்விளக்குகள் மற்றும் அலுமாரி போன்ற பெறுமதியான பொருட்கள் உட்பட அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன.

தற்போது இக்கட்டடம் இரவு வேளைகளில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் போதையை பாவிப்பது மாத்திரமின்றி மற்றவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கக் கூடிய சகல காரியங்களையும் செய்து வருகின்றனர். இதனால் இப்பிரதேச மக்கள் குறிப்பாக யுவதிகளும் தாய்மார்களும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இப்பகுதியில் பள்ளிவாசல், சமுர்த்தி காரியாலயம், ஆயுர்வேத மருந்தகம் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவ்விடயங்களை சுட்டிக்காட்டி இக்கிராமோதய சுகாதார நிலைய கட்டடத்தினை மீளப்பயன்படுத்துமாறு இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கழத்தினால் அக்கரைப்பற்று மாநகர முதல்வர், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோருக்கு ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள் அல்லது பொதுமக்கள் பயன்படுத்தக் கூடியவாறு இக்கட்டடத்தை புனரமைப்பு செய்யுமாறு இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.