ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகாவிடின் வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஹர்தால் – வசந்த சமரசிங்க

0
496

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை 13 ஆம் திகதி பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் ஹர்தால் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளித்து அரச தலைவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கு கிடையாது.

இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரச தலைவரையும் நாட்டு மக்கள் இந்தளவிற்கு வெறுக்கவில்லை. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

நாட்டு மக்கள் ஒன்றினைந்து பதவி விலகுமாறு வலியுறுத்தும் போது ஜனாதிபதி பதவி விலகலுக்காக சுபவேளை பார்த்துக்கொண்டிருக்கிறார். 

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை நிச்சயம் பதவி விலக வேண்டும். பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் பாரிய ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுப்படுவோம்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியவுடன், பதில் ஜனாதிபதியாகலாம் என முன்னெடுக்கும் அரச சூழ்ச்சியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைவிட வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது. மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து பதவி விலக வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவி விலகாமல் அரசியல் சூழ்ச்சியை முன்னெடுத்தால் மேலும் பாரதூரமான விளைவுகளை இருவரும் எதிர்கொள்ள நேரிடும். 

ஜனாதிபதி பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவித்து, அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அறிவித்து, சபாநாயகர் அதனை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தும் வரை ஜனாதிபதியின் பதவி விலகல் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்றார்.