தராதரம் பாராமல் தண்டனை; சஜித்

0
381

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை இலக்கு வைத்து சில நாசகார குழுவால் தீயிட்டு எரித்ததை வெறுப்புடன் கண்டிப்பதோடு, இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தராதரம் பாராமல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படும் சமூகத்துக்காக இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒரு சிவில் போராட்டத்தில் இணைந்தனர் என்பதோடு, அதன் உன்னத நோக்கங்களை ஒருபோதும் காட்டிக் கொடுக்காத அளவுக்கு அவர்கள் ஒழுக்கமும் நாகரீகமும் கொண்டவர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஆனால் அந்த போராட்டத்தின் போர்வையில் சில சந்தர்ப்பவாத மற்றும் சீர்குலைக்கும் எண்ணப்பாடுகள் கொண்ட குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட சொத்துச் சேதங்கள், தீ வைப்புச் சம்பவங்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் சிறு சிறு சம்பவங்கள் என்பவற்றை நிபந்தனையின்றி முற்றாக எதிர்க்கிறோம்.

கடந்த சில நாட்களில், பேராட்டக்காரர்கள், சிவில் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், குடிமக்கள் உட்பட ஏராளமான மக்கள் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததோடு, இது குறித்தும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். வன்முறையற்ற அமைதியான நாட்டிற்காக பாதுகாப்பாக கட்டமைக்கப்பட்ட குடிமக்களின் போராட்டத்திற்கு கறுப்பு புள்ளிகளை சேர்க்க முயலும் வெளிச் சக்திகள் பற்றி ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது மிகவும் முக்கியமான தருணம் என்பதால், அமைதியாகவும், நிதானமாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றுபடுமாறு அனைத்து குடிமக்களையும் நாங்கள் மரியாதையுடன் அழைக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.