ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட ரூ. 17,850,000 பணம் இன்று நீதிமன்றிற்கு

0
63

ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு கோடி 78 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் கொழும்பு, கோட்டை பொலிஸாரினால் இன்று (11) நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் குறித்த தொகை பணம் மீட்கப்பட்டதாகவும், அதனை ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று பெற்றுக் கொள்ளுமாறும், கொழும்பு மத்திய பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் குழுவொன்றுடன் சென்று அப்பணத்தை பொறுப்பேற்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பணம், ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற இளைஞர்களகால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பில் அங்கிருந்த விசேட அதிரடிப்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் பின்னர் கொழும்பு மத்திய பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பணம் தற்போது கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அது தொடர்பில் இன்றையதினம் (11) நீதிமன்றிற்கு அறிவிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.