ஆப்கானுக்கு மேலும் 2500 மெற்றிக் தொன் கோதுமையை அனுப்பியது இந்தியா

0
514

ஐம்பதினாயிரம் மெற்றிக் தொன் கோதுமை மனிதாபிமான உதவியாக ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் என இந்தியா அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய மேலும் 2500 மெற்றிக் தொன் கோதுமை பாகிஸ்தானின் அட்டாரி-வாகா எல்லை ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இற்றை வரையும் 36,000 மெற்றிக் தொன் கோதுமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய சுங்கத்தின் இணை ஆணையாளர் பல்பீர் மங்கட், இன்னும் 14,000 மெற்றிக் தொன் மாத்திரமே அனுப்பி வைக்கப்பட எஞ்சியுள்ளது’ என்றுள்ளார்.

இதேவேளை வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் அரிந்தம் பக்‌ஷி விடுத்துள்ள ட்வீட்டில், ‘மேலும் 3000 மெற்றிக் தொன் கோதுமை அடுத்த கட்டமாக அனுப்பி வைக்கப்படும். ஆப்கான் மக்களுக்கான எமது மனிதாபிமான உதவிகளது அர்ப்பணிப்பை இது உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆப்கான் மக்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்த கோதுமையில் பெரும்பகுதியை உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து வெற்றிகரமாக அனுப்பியுள்ளோம்’ என்று தெரிவித்திருக்கின்றார். 

ஆப்கானிஸ்தான் மக்களுக்கான  ஒரு சிறப்பு நடவடிக்கையாக, மனிதாபிமான அடிப்படையில் 50,000 மெற்றிக் தொன் கோதுமை மற்றும் உயிர்காக்கும் மருந்துப்பொருட்களை இந்தியாவிலிருந்து வாகா எல்லை ஊடாக ஆப்கானுக்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் அரசு 2021 நவம்பரில் அங்கீகாரம் அளித்தது. அதற்கு ஏற்ப இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’ என்று ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.