ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் – ரணில் வருத்தம்

0
665

ரணில் வெளியிட்ட அறிவிப்பு

தனது தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் போராட்டங்களைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிக முக்கியமானது. எந்தவொரு வன்முறையையும் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாதுகாப்புப் படையினரையும் எதிர்ப்பாளர்களையும் நிதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளை சேகரித்துக்கொண்டிருந்த குறைந்தது நான்கு செய்தியாளர்கள் விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடி விசாரணைக்கு உத்தரவு

இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்த காவல்துறை மா அதிபர் தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.