தளர்த்தப்பட்டது பொலிஸ் ஊரடங்கு சட்டம் !

0
421

நாட்டின் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட, களனி மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளுக்கே குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர்  தன்னிச்சையாக பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியமை சட்டவிரோதமானது . மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் இந்த சட்டவிரோத உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழுத்தம் கொடுத்திருந்தது.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை தொடர்பில் அழுத்தங்களையும் அதிருப்த்தியையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.